search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம்: நீதிபதி முன்னிலையில் நாளை பேச்சுவார்த்தை
    X

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம்: நீதிபதி முன்னிலையில் நாளை பேச்சுவார்த்தை

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் நாளை கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள்.

    அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் சேகரன் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அப்போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராகி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். நீதிபதி முன்னிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அந்தந்த துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    வேலை நிறுத்தம் செய்த காலத்தை ‘‘நோ ஒர்க்’’ ‘‘நோ பே’’ என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

    2003-ம் ஆண்டு நடந்த அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது சம்பள பிடித்தம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல தற்போது நடந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டம் நடத்திய 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 8 நாட்கள் (சனி, ஞாயிறு உள்பட) சம்பளத்தை பிடிக்க அரசு முடிவு செய்வதாக தெரிகிறது.

    Next Story
    ×