search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் கன மழை: நிரம்பும் நிலையில் சிறுவாணி அணை
    X

    கோவை மாவட்டத்தில் கன மழை: நிரம்பும் நிலையில் சிறுவாணி அணை

    சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடாமல் நேற்று இரவு பெய்தது. இதனால் கடந்த 2 ஆண்டாக தண்ணீர் இல்லாமல் இருந்த குளங்கள், தடுப்பணைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பியது. இதுவரை 25 குளங்கள் நிரம்பி உள்ளன.

    மழையால் கோவை நகரின் பல இடங்களில் மின் இணைப்பு தடைபட்டது. குறிச்சி காமராஜர் நகர், சிட்கோ பகுதிகளில் நேற்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்ஊழியர்கள் சரி செய்தனர்.

    கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை இந்த ஆண்டு தொடக்கத்தில் வறண்டு காணப்பட்டது. பருவமழை தொடங்கிய நாள் முதலே மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது. அணையில் இருந்து நீர் எடுக்க உதவும் நீரேற்று கிணற்றில் உள்ள 4-வது வால்வும் மூழ்கியது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 3 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    பில்லூர் அணை நிரம்பி விட்ட நிலையில் சிறுவாணி அணையும் நிரம்ப வாய்ப்புள்ளதால் வரும் ஆண்டில் குடிநீர் பிரச்சினை இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதேபோல 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் தற்போது 85 அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 730 மில்லி மீட்டர்(73 சென்டி மீட்டர்) மழை பெய்துள்ளது.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதையடுத்து வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்பட்டிருந்தன.
    Next Story
    ×