search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவர் - கண்டக்டர் போராட்டம்: புதுவையில் அரசு பஸ்கள் ‘ஸ்டிரைக்’
    X

    டிரைவர் - கண்டக்டர் போராட்டம்: புதுவையில் அரசு பஸ்கள் ‘ஸ்டிரைக்’

    புதுவை அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கடந்த 10-ந்தேதி புதுவை அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர் ஏழுமலை என்பவர் இந்திராகாந்தி சிலை அருகே தனியார் பஸ் புரோக்கரால் தாக்கப்பட்டார். இதில், ஏழுமலைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதோடு இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும் முறையிட்டார்.

    ஆனால், இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் புரோக்கரும் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று கோரிமேட்டுக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் ரமேஷ் தனியார் பஸ் புரோக்கர்களால் தாக்கப்பட்டார்.

    இது குறித்து கோரி மேடு போலீசில் டிரைவர் ரமேஷ் புகார் செய்தார். ஆனால், இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்று கூறி இன்று அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    வேலை நிறுத்தம் செய்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் புதுவை பஸ் நிலையம் பின்புறம் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் புதுவை நகர பகுதி மற்றும் கிராம பகுதிகளுக்கு இயங்ககூடிய 40 பஸ்கள் மற்றும் 20 மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    அதே வேளையில் சென்னை, கடலூர், காரைக்கால் வழித்தடங்களில் செல்லக்கூடிய அரசு பஸ்கள் இயங்கின.
    Next Story
    ×