search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கள்ளக்காதலன் ஏழுமலை, கொலை செய்யப்பட்ட சுசீலா
    X
    கைதான கள்ளக்காதலன் ஏழுமலை, கொலை செய்யப்பட்ட சுசீலா

    சங்கராபுரம் அருகே பெண் கொலை: கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

    சங்கராபுரம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடமாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுசீலா (வயது 55). இவர் நேற்று முன்தினம், தனது கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். நிலத்தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர்.

    தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஏழுமலை (39) என்பவர், கள்ளக்காதல் தொடர்பாக சுசீலாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடினர்.

    போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் ஏழுமலை, வடமாமாந்தூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் சரணடைந்தார். இதையடுத்து ஏழுமலை மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சுசீலாவை கொலை செய்தது குறித்து ஏழுமலை போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் வடமாமாந்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். சுசீலா, அவரது நிலத்தில் கரும்பு பயிர் செய்து வந்தார். சுசீலாவின் கணவர் வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சுசீலாவின் 2 மகன்கள் வெளியூர் சென்று விட்டனர். நான் அவ்வப்போது, சுசீலாவின் வயலுக்கு சென்று அவருக்கு உதவி செய்து வந்தேன்.

    அப்போது எனக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். கடந்த ஓராண்டுக்கு முன்பு சுசீலாவிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினேன். சில நாட்களாக அந்த பணத்தை அடிக்கடி கேட்டு சசீலா தொந்தரவு செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி சுசீலா வீட்டில் இருந்து வயலுக்கு சென்றார். இதை அறிந்த நான் அவரை பின் தொடர்ந்து சென்றேன். கரும்பு தோட்டத்துக்கு சென்றதும், அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் சுசீலா உல்லாசத்துக்கு மறுத்துவிட்டார். மேலும் கடன் கொடுத்த பணத்தை கேட்டு அவமான படுத்தினார்.

    இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், அருகில் இருந்த கல்லை எடுத்து சுசீலாவின் முகத்தில் ஓங்கி அடித்தேன். பின்னர் அவரை கீழே தள்ளி தலையில் கால் வைத்து சேற்றில் அமுக்கினேன். இதில் சுசீலா துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சுசீலா வைத்திருந்த செல்போனையும், அவரை அடித்த கல்லையும் கரும்பு தோட்டத்தில் தூக்கிப்போட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். போலீசார் தேடியதை அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

    கைதான ஏழுமலையை போலீசார் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கடலூர் சிறையில் ஏழுமலை அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×