search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையில் நனைந்த புத்தகங்கள்.
    X
    மழையில் நனைந்த புத்தகங்கள்.

    திருவண்ணாமலையில் பலத்த மழை: 40 ஆயிரம் புத்தகங்கள் நனைந்து நாசம்

    திருவண்ணாமலையில் பலத்த மழையால் 40 ஆயிரம் புத்தகங்கள் நனைந்து நாசமானது. இதையடுத்து புத்தக கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, நே‌ஷனல் புக் டிரஸ்ட் இந்தியா சார்பாக கடந்த 18-ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு 120 பதிப்பாளர்கள் கடைகள் அமைத்து உள்ளனர். இந்த புத்தக திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டு, வாங்கி செல்கின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் புத்தக திருவிழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தின் மேலிருந்து மழைநீர் கொட்டியது. இதனால் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கடைக்குள் மழைநீர் விழுந்து புத்தகங்கள் நனைந்தது.

    பதறிபோன பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்கள் மீது தார்பாய் போட்டு மூடினர். மேலும் சிலர் போதிய தார்பாய் இல்லாததால், மழைநீர் விழும் இடத்தில் அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்தனர். ஆனால் 40 ஆயிரம் புத்தகங்கள் மழையில் நனைந்து நாசமானது. மழைநீரில் நனைந்த புத்தகங்களை கடைக்காரர்கள் வெளியே போட்டு காய வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் வந்து பார்வையிட்டார். அவரிடம் பதிப்பாளர்கள் கடைகளை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து புத்தக கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் புத்தகங்களை காண பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

    புத்தக திருவிழாவை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட புத்தக திருவிழா, கூடாரம் சீரமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×