search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்துக்கு பெருமை சேர்க்கும் அப்துல்கலாம் மணிமண்டபம்
    X

    ராமேசுவரத்துக்கு பெருமை சேர்க்கும் அப்துல்கலாம் மணிமண்டபம்

    ராமேசுவரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது “ஏவுகணை நாயகன்” அப்துல்கலாம் தான். அவர் தனது மாண்புமிகு பண்புகளாலும், செயற்கரிய விண்வெளி படைப்புகளாலும் மக்களின் மனமெல்லாம் நிறைந்திருக்கிறார்.
    ராமேசுவரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது “ஏவுகணை நாயகன்” அப்துல்கலாம் தான். வறட்சியே பிரதானமான மாவட்டத்தில் பிறந்த அவர் தனது மாண்புமிகு பண்புகளாலும், செயற்கரிய விண்வெளி படைப்புகளாலும் மக்களின் மனமெல்லாம் நிறைந்திருக்கிறார்.

    ஒப்பற்ற விஞ்ஞானியான அவரை தேடி வந்தது ஜனாதிபதி பதவி. அந்த பதவியும் அவரால் பெருமை பெற்றது. உலகமே போற்றும் வகையில் பணியாற்றிய அவர் எதிர்பாராத விதமாக நம்மையெல்லாம் விட்டு பிரிந்தார். அவர் நம்மை விட்டு பிரிந்து 2 ஆண்டுகளாகி விட்டாலும் அவரது நினைவுகள் இன்னும் நம்மை விட்டு விலகவில்லை.

    ஒப்புயர்வில்லா அந்த மாமேதைக்கு அவர் பிறந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    3½ ஏக்கர் நிலப்பரப்பில் 50x50 மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. ரூ.15 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டப பணிகள் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகம், கோவா உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 450 தொழிலாளர்கள் இரவு- பகலாக உழைத்து மணி மண்டபத்தை உருவாக்கி உள்ளனர். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு தடைகளை தாண்டி இந்த சாதனைகளை செய்து முடித்துள்ளது.

    மணிமண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் கிருஷ்ணகிரியில் இருந்தும் கொண்டு வரப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது.

    தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் 150 மி.மீ. தடிமன் கொண்டதாகும். இந்த கற்களின் மீது தினசரி 3 ஆயிரம் பேர் நடந்தாலும் தேயாத வகையிலும், சேதமடையாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நினைவு மண்டபத்தின் முன்பக்க நுழைவு வாயில் மலேசிய தேக்கு மரத்தால் விண்முட்ட உயர்ந்து நிற்கிறது. காரைக்குடி செட்டிநாட்டு தச்சர்கள் இந்த பிரமாண்ட கதவை உருவாக்கி உள்ளனர். கதவுகள் ஒவ்வொன்றும் தலா 250 கிலோ வீதம் 500 கிலோ எடை கொண்டதாகும்.

    மணிமண்டபத்தின் உள்பகுதியில் பாராளுமன்றத்தின் தோற்றம் ஓவியமாக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. மண்டபத்தில் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலாம் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்பதை குறிக்கும் வகையில் குழந்தைகள் விளையாடுவதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    2-வது சிலை அறிவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை பார்வையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளது.

    3-வது சிலை குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், 4-வது சிலை குழந்தைகள் ஒருவரையொருவர் கை தூக்கிவிட்டு உதவி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.



    மண்டபத்தின் சுவர்களில் அமெரிக்க பாராளுமன்றத்தில் கலாம் பேசுவது, வீணை வாசிப்பது, குடியரசு தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவது, குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் காட்சி.

    திருவனந்தபுரம் தம்பா என்ற இடத்தில் ராக்கெட் பாகங்களை கலாம் சைக்கிளில் எடுத்துச்செல்வது, குடியரசு தலைவராக பதவி ஏற்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வருவது, உலக தலைவர்களுடன் பேசுவது போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

    கலாம் சமாதி முன்பாக 17 மீட்டர் வட்டவடிவத்தில் பிரார்த்தனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சமாதியில் இருந்து கண்ணாடியில் அவரது உருவத்தை பார்க்கும் வகையில் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கலாம் நினைவிடம் அருகில் 63 அடி உயரத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

    மணிமண்டபத்தின் அருகே அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபம் அருகே ஏராளமான வாகனங்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கலாம் கண்ட பசுமை திட்டத்தின் கீழ் வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மொத்தத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம் ராமேசுவரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    அப்துல்கலாம் மணிமண்டபம் முழுவீச்சில் கட்டி முடிக்கப்பட்டது குறித்து அவரது பேரன் சேக் சலீமிடம் கேட்டபோது, ‘ஒப்பற்ற விஞ்ஞானியாக அனைவரும் போற்றும் குடியரசு தலைவராக விளங்கிய எங்கள் தாத்தாவுக்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. குறுகிய காலத்தில் பணிகளை திறம்பட செய்து அசத்தி உள்ளனர். இஸ்ரோவில் பணியாற்றியபோது மற்றும் பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது பங்கேற்றது போன்ற படங்கள் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மொத்தத்தில் அப்துல் கலாமுக்கு மத்திய அரசு மணிமண்டபம் கட்டி திறந்திருப்பது இந்தியர் அனைவருக்கும் சந்தோ‌ஷமே’ என்றார்.


    Next Story
    ×