search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    ஜீவசமாதி அடைய அனுமதி தாருங்கள்: ராஜீவ் கொலையாளி முருகன் மனு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளி முருகன் ஜீவ சமாதி அடைய அனுமதி கேட்டு சிறைதுறைக்கு மனு கொடுத்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் தண்டனை பெற்ற முருகனின் மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் 4 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே தங்களுடைய வாழ்வை கழித்து வருகின்றனர். இதில் நளினியையும், முருகனையும் கணவன்-மனைவி என்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பெரும்பாலானோர் 50 வயதை நெருங்கிவிட்டனர். வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து விட்டனர். இந்நிலையில் நளினி-முருகன் தம்பதியின் மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

    இதற்காக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி ஏற்கனவே சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார். ஆனாலும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் உள்ள முருகன் அறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் மொட்டைத் தலையுடன் காணப்பட்ட முருகன் இப்போது காவி உடை, ஜடாமுடி என முழு சாமியாராகவே மாறியுள்ளார்.

    சிறையில் இருந்து விடுதலை என்பது இல்லை என்ற எண்ணம் முருகன் உட்பட நான்கு பேரின் மனதிலும் ஊறிப்போய் விட்டது.

    எனவே அவர்கள் விடுதலை என்ற கோரிக்கையை விட்டு வேறு விதமான கோரிக்கைகளை இப்போது முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் என்பவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து முருகனும் ஒரு கோரிக்கையை முன்வைத்து சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில் நான் எனது வாழ் நாளில் அதிக காலம் சிறையிலேயே கழித்து விட்டேன். சிறை வாழ்க்கை தொடர எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஜீவ சமாதி அடைய அனுமதி தாருங்கள் ஜீவ சமாதி அடைய இருப்பதால் வருகிற 18-ந்தேதி முதல் உணவு பொருட்கள் எதுவும் எடுத்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

    முருகன் அளித்த மனு வேலூர் ஜெயில் சூப்பிரண்டு மூலம் சென்னை சிறைத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×