search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்களை போதை பழக்கத்திலிருந்து தடுக்கும் கருவி யோகா: கவர்னர் வித்யாசாகர் ராவ்
    X

    இளைஞர்களை போதை பழக்கத்திலிருந்து தடுக்கும் கருவி யோகா: கவர்னர் வித்யாசாகர் ராவ்

    அனைத்து இளைஞர்களும் யோகா கற்பதன் மூலம் திறமையானவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்க முடியும். இளைஞர்களை போதை பழக்கத்திலிருந்து தடுக்கும் கருவி யோகா என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
    கோவை:

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி சிலை முன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலா துறை மந்திரி மகேஷ்சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.



    ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதிறமை உண்டு. அந்த திறமையை வெளிகொண்டு வரும் தொழில் நுட்பம் யோகா. இந்த தொழில் நுட்பம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். ஒரு நாட்டை வல்லரசாக்க முடியாது. வல்லரசாக்க நாட்டில் உள்ள மக்களை யோகா மூலம் திறமையானவர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.

    அப்போது அந்த நாடு வல்லரசாக மாற முடியும். இந்தியா கலாச்சாரத்துக்கு புகழ்பெற்றது. ஆதியோகி தான் யோகாவின் முதல் மனிதர். தற்போது ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். ஏராளமான சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு காரணம் மன நிலையை ஒருமுகப்படுத்த முடியாதது தான்.

    மனிதனின் மன நிலையை ஒருமுகப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், உப யோகா என்ற சாதாரண யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் 100 பேருக்கு யோகா கற்றுக்கொடுத்தால் ஒரு ஆண்டில் 10 கோடி பேர் யோகா கற்க முடியும்.

    உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசு யோகா. பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் யோகா ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 192 நாடுகளில் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவை கற்பதன் மூலம் ஒரு ஆண் சூப்பர்மேன் ஆகலாம். ஒரு பெண் சூப்பர் பெண் ஆகலாம்.

    நாட்டில் உள்ள அனைவரும் யோகா கற்பதன் மூலமாக திறமையானவர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் திகழ முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த 40 பல்கலைக்கழகங்களுக்கும் நான் தான் வேந்தர். இங்கு அனைவரும் யோகா கற்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த மன அழுத்தத்தை போக்க யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் முதல் பல்வேறு நோய்களை குணப்படுத்த யோகா பயன்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு. அனைத்து இளைஞர்களும் யோகா கற்பதன் மூலம் இளைஞர்கள் திறமையானவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்க முடியும்.

    போதை, மது, பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கூட யோகா கற்றால் அதில் இருந்து விடுபட முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய சுற்றுலா துறை மந்திரி மகேஷ்சர்மா பேசியதாவது:-

    மனிதனின் உள்ளார்ந்தது யோகா. நான் ஒரு மருத்துவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யோகா செய்து வருகிறேன். அதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை நான் அறிந்து உள்ளேன். தற்கொலை சம்பவங்களுக்கு மன அழுத்தம் முக்கியமான காரணமாக உள்ளது. இதனை யோகா மூலம் தீர்வு காணலாம்.

    இறைவன் படைப்பில் மனிதன் ஒரு அறிய உயிரினம். மனிதனின் திறமையை வெளிக்கொணர யோகாவால் தான் முடியும். வரும் காலத்தில் இந்தியா உலகத்தையே முன்எடுத்து செல்லும் காலம் வரும். பிரதமர் நரேந்திர மோடி மந்திரிசபை, அமைச்சரவை கூட்டத்தை எல்லாம் தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு மேல் நடத்துவார். அவர் அவ்வாறு செயல்பட ஊக்கமாக இருப்பது யோகாதான். எனவே அனைவரும் யோகா கற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இதை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படைவீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள், வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஆதியோகி சிலை முன்பு யோகா பயிற்சி செய்தனர்.
    Next Story
    ×