search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணியார்டரில் லஞ்ச பணம் அனுப்பிய விவகாரம்: சுதாவிடம் கலெக்டர் நாளை விசாரணை
    X

    மணியார்டரில் லஞ்ச பணம் அனுப்பிய விவகாரம்: சுதாவிடம் கலெக்டர் நாளை விசாரணை

    மணியார்டரில் லஞ்ச பணம் அனுப்பிய விவகாரத்தில் நாளை விசாரணைக்கு வரும்படி சுதாவுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரை சேர்ந்த கூலித்தொழிலாளி தொப்பையன். இவர் கடந்த 30.8.2016 அன்று மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவருடைய மனைவி குப்பம்மாள், மகள் சுதா, மருமகன் திருப்பழனி ஆகியோர் தொப்பையன் ஈமச்சடங்குக்கு நிதி உதவி கேட்டு திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகம், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திலும் விண்ணப்பித்து இருந்தார்.

    ஈமச்சடங்கு நிதி வழங்க அவர்களிடம் அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.

    இதனால் மனவேதனை அடைந்த சுதா கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்துக்கு அனுப்பினார். அதில், நான் அனுப்பியுள்ள இந்த 2 ஆயிரம் ரூபாயை என்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்து விடுங்கள் என்று எழுதியிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தொப்பையனின் மனைவி குப்பம்மாள் மற்றும் சுதாவின் கணவர் திருப்பழனி ஆகியோரிடம் நேற்று முன்தினம் கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சப்-கலெக்டர் ரஞ்சனி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் யார்-யார்? அவர்கள் எவ்வளவு பணம் கேட்டனர்? என்பது குறித்து கேட்டனர்.

    அதன் பின்னர் உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் உள்பட 8 பேரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை 6.15 மணி வரை நடந்தது.

    இதையடுத்து சுதாவிடமும் விசாரணை நடத்த கலெக்டர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து சுதாவின் கணவர் திருப்பழனியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    சுதாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் நேற்று முன்தினம் கலெக்டர் நடத்திய விசாரணைக்கு அவர் வரவில்லை. நாளை நடைபெறும் விசாரணைக்கு வரும்படி சுதாவுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு சுதா வருவார். நடந்த சம்பவம் குறித்து கலெக்டரிடம் அவர் விளக்கமாக கூறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×