search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை அழிக்க பா.ஜனதா, காங்கிரஸ்- தி.மு.க. கூட்டு சதி: அன்பழகன் குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க.வை அழிக்க பா.ஜனதா, காங்கிரஸ்- தி.மு.க. கூட்டு சதி: அன்பழகன் குற்றச்சாட்டு

    பாரதீய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை கூட்டுச்சதி செய்து அ.தி.மு.க.வை அழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போது கூட்டப்பட்ட செயற்குழுவில் மறைந்த ஜெயலலிதா பேசினார்கள்.

    அவர் பேசும்போது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை இணைந்து என்னை ஜெயிலில் தள்ள திட்டமிட்டுள்ளனர் என்றார்.

    அவர் மறைந்த பிறகு தற்போது பாரதீய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை கூட்டுச்சதி செய்து அ.தி.மு.க.வை அழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

    அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க பெரும் முயற்சிகள் நடந்தது. அந்த முயற்சிகளை முறியடித்து  சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியை காப்பாற்றினர்.

    அதன்பிறகு சட்டப்படியும், நியாயப்படியும் இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே பாரதீயஜனதா திட்டமிட்டு தேர்தல் கமி‌ஷன் மூலம் சின்னத்தை முடக்கியது.

    தற்போது தினகரன் மீது அபாண்டமான பொய்யை சுமத்தி அவரை கைது செய்து அலைக்கழித்து வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதியை விசாரிப்பதுபோல 36 மணிநேரம் தொடர் விசாரணை நடத்துகின்றனர். அ.தி.மு.க.வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகின்றனர்.

    இரட்டை இலை சின்னம் தேர்தல் கமி‌ஷனுக்கு வழங்க ரூ.50 கோடி பேரம் பேசி ரூ.10 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு புகார் கொடுத்தவர் யார்? பணம் பெற ஒப்புக்கொண்ட தேர்தல் கமி‌ஷன் அதிகாரி யார்? என்று தெரியாது. இது பாரதீயஜனதாவின் நாடகம். இந்த நாடகத்திற்கு தமிழக மக்கள் வருங்காலத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்.

    புதுவையில் பட்ட மேற்படிப்புகளில் 2009-ம் ஆண்டிலேயே 50 சதவீத இடங்களை கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. ஆனால் அந்த ஆணையை யாரும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது அரசு 146 இடங்களை பெற்றிருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு கட்டணம் எவ்வளவு? அரசால் தேர்வு செய்யப்படும் மாணவர்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள் சேர்த்துக்கொள்ளுமா? வருகிற மே 31-ந் தேதிக்குள் 3 கவுன்சிலிங் நடத்தி முடிக்க வேண்டும்.

    ஆனால், மே முதல் வாரத்தில்தான் முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது. அரசால் அனுப்பப்படும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் கேட்டால் அவர்களால் எப்படி செலுத்த முடியும்? முறையாக மாணவர்களை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை சிறிய நகரம். அதிகபட்சமாக 20 கிமீ வேகத்தில்தான் நகர பகுதியில் மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியும். இங்கு ஹெல்மெட் கட்டாயம் தேவையில்லை. விரும்புவோர் ஹெல்மெட் அணியலாம் என அறிவிக்க வேண்டும்.

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×