search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அபார வெற்றி
    X

    வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அபார வெற்றி

    வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது.
    ஜொகனஸ்பர்க்:

    தென்னாப்ரிக்கா சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்ரிக்கா அணி அபாரமாக வென்றது.

    இதையடுத்து ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி கிம்பெர்லீயில் உள்ள டைமண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மஷ்ரஃபி மொர்டஸா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் கயீஸ், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    லிட்டன் தாஸ் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்தில் டூபிலெஸ்சியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷாகிப் அல் ஹான் களமிறங்கினார். அடுத்ததாக இம்ருல் கயீஸ் 31 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக முஷ்ஃபிகுர் ரஹீமுடன் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்தார். முஷ்ஃபிகுர் ரஹீம் சிறப்பாக நிலைத்து நின்று விளையாடினார்.

    இருப்பினும் எதிரே வந்த வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தவறினர். மஹ்மதுல்லா (26), சபீர் ரஹ்மான் (19), நசிர் ஹொசைன் (11), மொஹமது சைஃபுதின் (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முஷ்ஃபிகுர் ரஹீம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 116 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்கா பந்துவிச்சில் ரபாடா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    அடுத்து 279 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்ரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கியிண்டன் டி-காக்கும் ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி வங்காளதேச வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டது.

    இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி இறுதிவரை அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதிசெய்தது. தென்னாப்ரிக்கா அணி 42.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி-காக் 145 பந்துகளில் 168 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அம்லா 112 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார்.

    168 ரன்கள் குவித்த தென்னாப்ரிக்காவின் டி-காக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என தென்னாப்ரிக்க முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான அடுத்த போட்டி வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×