search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது சிறப்பானது: வீராட்கோலி
    X

    இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது சிறப்பானது: வீராட்கோலி

    அனைத்து ஆட்டங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) இலங்கையை முழுமையாக வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது மிகவும் சிறப்பானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    கொழும்பு:

    கொழும்பில் நேற்று இரவு நடந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. தில்சான் முனவீரா 29 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) பிரியஞ்சன் 40 ரன்னும் எடுத்தனர்.

    யசுவேந்திர சஹால் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்தியா 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வீராட்கோலி 54 பந்தில் 82 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), மனிஷ் பாண்டே 36 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது. அதாவது 9-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி வீராட்கோலி அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு இந்திய அணி தோல்வியை தழுவாமல் அனைத்து ஆட்டத்திலும் வென்றது இல்லை.

    டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தை 1-0 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்று சரித்திரம் படைத்தது.

    ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற கேப்டன் வீராட் கோலி வெற்றி குறித்து கூறியதாவது:-

    அனைத்து ஆட்டங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) இலங்கையை முழுமையாக வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது மிகவும் சிறப்பானது.



    முன்னதாக திட்டமிட்டு இதை செய்யவில்லை. இந்த பாராட்டு எல்லாம் வீரர்களை தான் சாரும். அணியில் உள்ள 15 பேரும் நல்ல நிலையில் இருப்பதால் வலிமை பெற்றுள்ளோம். இதனால் முடிவுகள் அற்புதமாக இருக்கிறது.

    எனது ஆட்டம் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வடிவிலான போட்டியிலும் எனது ஆட்டம் சிறப்பாக இருக்கவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து இலங்கை கேப்டன் உபுல் தரங்கா கூறும்போது, 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். தொடக்கம் சிறப்பாக இருந்தது. 10 முதல் 14-வது ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை தவற விட்டோம். வீராட்கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் ஒவ்வொருவருக்கும் உதாரணமாக இருக்கிறார் என்றார்.

    இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. 17-ந்தேதி இந்த தொடர் தொடங்குகிறது.
    Next Story
    ×