search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகளுடன் உரையாடுகிறார், ஜான்டி ரோட்ஸ்
    X
    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகளுடன் உரையாடுகிறார், ஜான்டி ரோட்ஸ்

    தெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடக்கூடாது: சென்னையில், ஜான்டிரோட்ஸ் பேட்டி

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான ஜான்டி ரோட்ஸ் சென்னையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சாதனைகள் மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. வெவ்வேறு காலக்கட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசுவதை நான் விரும்புவதில்லை. சச்சின் தெண்டுல்கரும், விராட் கோலியும் வியப்புக்குரிய வீரர்கள். இருவரும் அவரவர் பாணியில் சிறந்தவர்கள். தெண்டுல்கர் எப்போதும் தெண்டுல்கர் தான். கோலி எப்போதும் கோலி தான்’ என்றார்.

    தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரோட்ஸ், ‘தெண்டுல்கர் தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். கிட்டத்தட்ட 40 வயது வரை களத்தில் நீடித்த அவர் 24 ஆண்டுகள் விளையாடி சில இலக்குகளை நிர்ணயித்து இருக்கிறார். நவீன கிரிக்கெட்டில் உள்ள தேவைகளை சமாளித்து அவரை போன்று கோலியால் நீண்ட காலம் விளையாட முடியுமா? என்பது தெரியவில்லை. கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை அபாரமாக தொடங்கி இருக்கிறார்.



    நம்ப முடியாத அளவுக்கு ரன்கள் குவித்து வருகிறார். இளம் வயதிலேயே நிறைய ரன்கள் எடுத்துள்ளார். கோலி, கோலியாகத் தான் இருக்க வேண்டும். அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக்கூடாது’ என்றார்.

    பீல்டிங்குக்கு புகழ்பெற்ற ரோட்சிடம் இந்திய அணியில் உங்களை கவர்ந்த பீல்டர் யார் என்று கேட்ட போது, ‘யுவராஜ்சிங், முகமது கைப் சிறப்பான வகையில் பீல்டிங் செய்து இருக்கிறார்கள். விராட் கோலியும் பரவாயில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை இந்தியாவில் சிறந்த பீல்டராக சுரேஷ் ரெய்னாவைத் தான் சொல்வேன்’ என்று குறிப்பிட்டார்.

    எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு குறையுமா? என்று கேள்வி எழுப்பிய போது, ‘டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தான் எனது கருத்து. 20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டியும் இப்போது விறுவிறுப்படைந்து விட்டது. உண்மையிலேயே ஒருநாள் போட்டிக்கு தான் ஆபத்து இருக்கிறது’ என்றார். 
    Next Story
    ×