search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பதம் பார்த்து 2-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த முறை வரலாறு படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டன் மிதாலி ராஜ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 392 ரன்), முந்தைய ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த சூறாவளி ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. பூனம் ரவுத்தும் (295 ரன்), மந்தனாவும் (232 ரன்) கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. மந்தனா இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக்கில் 90 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்றால் அது அணிக்கு வலுவூட்டுவதாக அமையும்.

    இந்திய அணி மகுடம் சூடினால் உலக கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி, மொத்தத்தில் 4-வது அணி என்ற பெருமையை பெறும். 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி ஆகியோர் இந்த சீசனிலும் களத்தில் இருக்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற மகத்தான சாதனைகளுடன் வலம் வரும் இவர்களுக்கு இது தான் கடைசி உலக கோப்பையாகும். அதனால் கோப்பையை உச்சிமுகர்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

    பந்து வீச்சில் இந்தியாவின் பலம் சுழல் தான். இந்த உலக கோப்பையில் சுழற்பந்து வீச்சு மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (41 விக்கெட்) அணி என்ற பெருமை இந்தியாவையே சாரும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் நம்பிக்கை நாயகியாக மின்னுகிறார்.

    மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க லீக்கில் இந்தியாவிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு வரிசையாக வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. பியூமோன்ட் (387 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (363 ரன்), விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (351 ரன்) ஆகியோர் தான் இங்கிலாந்து அணியின் தூண்கள். இவர்களை சீக்கிரம் சாய்த்து விட்டால் இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்து விடலாம்.

    இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 377 ரன்களும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 373 ரன்களும் குவித்து இங்கிலாந்து மலைக்க வைத்தது. நடப்பு தொடரில் சராசரியாக அதிக ரன்ரேட்டை (5.79) கொண்டுள்ள அணி இங்கிலாந்து தான். உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். அது மட்டுமின்றி லீக்கில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இருப்பதை ஹீதர் நைட்டும் ஒப்புக்கொண்டார். அதனால் இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 62 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 34-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 10 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டு இருக்கின்றன.

    மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் வெற்றி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் சூழ்ந்திருக்கும் உச்சக்கட்ட நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.4¼ கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.2 கோடியே 12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: மந்தனா, பூனம் ரவுத், மிதாலி ராஜ் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது எக்தா பிஷ்ட்,

    இங்கிலாந்து: வின்பீல்டு, டானி பியூமோன்ட், சாரா டெய்லர், ஹீதர் நைட் (கேப்டன்), நதாலி ஸ்சிவர், பிரான் வில்சன், கேத்ரின் புருன்ட், ஜெனி குன், லாரா மார்ஷ், அன்யா சிரப்சோலே, அலெக்ஸ் ஹர்ட்லி.

    இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×