search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: 2-வது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: 2-வது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    டெர்பி:

    8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

    முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது.

    வாழ்வா-சாவா? சூழ்நிலையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்தார். மன்பிரீத் கவுர் 60 ரன்னும், வேதா கிருஷ்ணமூர்த்தி 70 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணியை 79 ரன்னில் இந்தியா சுருட்டியது. ராஜேஸ்வரி கெய்க்வாட் 5 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்த மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானம் எனலாம். ஏனெனில் இங்கு நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆடுகளத்தின் சாதகத்தை பயன்படுத்தி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும். ஆனால் அது எளிதான காரியம் கிடையாது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு ஆட்டங்களில் ஜொலித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தனா நல்ல நிலைக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இந்திய அணி 8 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 11 முறை மல்லுக்கட்டி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி 9 முறையும், இந்திய அணி 2 தடவையும் வெற்றி கண்டுள்ளன. உலக கோப்பை போட்டியில் 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஆஸ்திரேலிய அணி 6 முறை கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. 2005-ம் ஆண்டில் மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. எனவே இரு அணிகளையும் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் அளித்த பேட்டியில், ‘அரைஇறுதிப்போட்டி நடைபெறும் இடம் எங்களுடைய உள்ளூர் மைதானமாகவே கருதுகிறேன். இங்கு நாங்கள் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். ஆஸ்திரேலியா மிகவும் சிறப்பான அணியாகும். அந்த அணியில் வீராங்கனைகளின் கலவை சிறப்பான முறையில் இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. சூழ்நிலைக்கு தகுந்தபடி அணியினர் எப்படி ஆடுகிறார்கள் என்பது தான் மிகவும் முக்கியமானதாகும். முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியது போல் நாங்கள் செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணியை வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.

    இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா அளித்த பேட்டி ஒன்றில், ‘ஆஸ்திரேலிய அணியை இந்தியா நிச்சயம் வீழ்த்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

    இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), எக்தா பிஷ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, மான்சி ஜோஷி, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மந்தனா, மோனா மேஷ்ரம், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், நுஷாத் பர்வீன், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, சுஷ்மா வர்மா.

    ஆஸ்திரேலியா: மெக் லேனிங் (கேப்டன்), சாரா அலெய், கிறிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் பால்டன், ஆஷ்லிக் கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலே, ஜெஸ் ஜோனசென், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மெகன் ஸ்கப்ட், பெலின்டா வகரெவா, வில்லானி, அமந்தா ஜாட் வெலிங்டன்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×