search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? ஆஸ்திரேலியாவுடன் நாளை பலப்பரீட்சை
    X

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? ஆஸ்திரேலியாவுடன் நாளை பலப்பரீட்சை

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி விழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
    டெர்பி:

    மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-வது அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தது.

    இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் இங்கிலாந்து (35 ரன்), வெஸ்ட்இண்டீஸ் (7 விக்கெட்), பாகிஸ்தான் (95 ரன்), இலங்கை (16 ரன்), நியூசிலாந்து (186 ரன்) அணிகளை வென்று இருந்தது. தென்ஆப்பிரிக்கா (115 ரன்), ஆஸ்திரேலியா (8 விக்கெட்) அணிகளிடம் தோற்று இருந்தது.

    நியூசிலாந்துக்கு எதிராக அபாரமான திறமையை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்தினார்கள். அதே திறமையுடன் விளையாடினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். கேப்டன் மிதாலிராஜ் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் ஒரு சதம், 3 அரை சதத்துடன் 356 ரன் (7 ஆட்டம்) குவித்துள்ளார். சராசரி 50.85 ஆகும். இதுதவிர பூனம்ரவூத் (281 ரன்), சும்ருதி (226 ரன்) ஆகியோரும் பேட்டிங்கில் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    பந்துவீச்சில் தீப்திசர்மா, ஏக்தா பிஸ்ட் (தலா 9 விக்கெட்), பூனம் யாதவ் (8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவை ஏற்கனவே 8 விக்கெட்டில் வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    மேக்லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்திடம் மட்டும் 3 ரன்னில் தோற்று இருந்தது. மற்ற 6 ஆட்டங்களில் வென்று இருந்தது. வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய வீராங்கனைகள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.

    இரு அணிகளும் 42 ஒருநாள் ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டியிலும், ஆஸ்திரேலியா 34 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×