search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் 5-வது வெற்றி: தவான், வில்லியம்சனுக்கு வார்னர் பாராட்டு
    X

    பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் 5-வது வெற்றி: தவான், வில்லியம்சனுக்கு வார்னர் பாராட்டு

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஐதராபாத் அணி வீரர் தவான், வில்லியம்சனுக்கு அணியின் கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை ஐதராபாத் மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

    மொகாலியில் நேற்று இரவு நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. தவான் 63 பந்தில் 77 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்சன் 27 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் வார்னர் 27 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும், மொகித்சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 26 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஷான் மார்ஷ் 50 பந்தில் 84 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அவரது ஆட்டம் பலன் இல்லாமல் போனது. ஆசிஷ் நெக்ரா, சித்தார்த் கவூல் தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் வார்னர் கூறியதாவது:-

    பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. தவான், வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். தவான் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் வீரர் மார்ஷ் அதிரடியாக ஆடினார். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் இறுதியாக கட்டுப்படுத்தி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் அணி ஐதராபாத்திடம் 2-வது முறையாக தோற்றது. ஒட்டு மொத்தத்தில் 5-வது தோல்வியை தழுவியது. இதுகுறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

    208 ரன் என்பது எடுக்க கூடிய இலக்கு தான். மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டை இழந்ததால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. எங்களது பந்துவீச்சு, பீல்டிங்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×