search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு
    X

    திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு

    திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது ஆந்திர போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவதை தடுக்க செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவரை 10,500 தமிழக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு தேவுடுகுடி காட்டுப்பகுதியில் கும்பல் ஒன்று செம்மரம் வெட்டிக்கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் 50 பேர் கொண்ட அதிரடிப்படையினர் தேவுடு குடிகாட்டுக்குள் சென்றனர். அங்கு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.

    சிறப்பு படையினரை கண்ட கடத்தல்காரர்கள் அதிரடிப்படை போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் ஹரிகிருஷ்ணா என்ற போலீசார் காயம் அடைந்தார். இதையடுத்து போலீசார் 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடத்தல் கும்பல் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்று விட்டனர்.

    அவர்கள் விட்டு சென்ற 36 செம்மரக்கட்டை பறி முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும்.

    காட்டுக்குள் தப்பி யோடிய கும்பலை பிடிக்க சிறப்பு காவல் படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×