search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராகுல்காந்தி
    X

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராகுல்காந்தி

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

    புதுடெல்லி:

    132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தலைவராக இருந்து வந்தார்.

    காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 19 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர கட்சிப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடவில்லை.

    வீட்டில் இருந்தபடியே கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து, கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

    இதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியாகாந்தி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 87-வது புதிய தலைவராக ராகுல் காந்தி கடந்த 11-ந்தேதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் 6-வது நபர் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று (சனிக்கிழமை) ராகுல்காந்தி முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். இதற்கான விழா இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்காக காங்கிரஸ் தலைமை அலுவலகம் பூக்களாலும், விதம் விதமான அலங்காரத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    ராகுல் தலைவராக பொறுப்பு ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில் இருந்தே காங்கிரஸ் தலைமை அலு வலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் சோனியா-ராகுலை வாழ்த்தி கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    காங்கிரஸ் கொடியை ஏந்தி நின்ற தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேள-தாளம் முழங்க ஆடியபடி இருந்தனர். ராகுல்காந்தி வந்தபோது பட்டாசு வெடித்து வரவேற்றனர்.


    அதுபோல ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்கிறார் என்ற போதும் பட்டாசுகள் வெடித்தனர். இனிப்பு வகைகளை வினியோகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் இன்று விழா கோலத்தில் மிதந்தது.


    சரியாக 11.04 மணிக்கு சோனியாவிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் பெற்றார். இதையடுத்து ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

    இதையடுத்து காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

    11.16 மணிக்கு மன்மோகன்சிங் வாழ்த்தி பேசினார். 11.25 மணிக்கு அவர் சோனியாவுக்கு நினைவு கேடயம் வழங்கினார். 11.26 மணிக்கு சோனியா பேசினார்.

    11.45 மணிக்கு ராகுல்காந்தி ஏற்புரை நிகழ்த்தி நன்றி தெரிவித்து பேசினார். 12 மணிக்கு அவர் தன் பேச்சை நிறைவு செய்தார்.

    ராகுல் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்தில் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது.

    Next Story
    ×