search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு: மத்திய அரசு தகவல்
    X

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு: மத்திய அரசு தகவல்

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
    புதுடெல்லி:

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக 2014-ம் ஆண்டில் அனைத்து வேட்பு மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது நாட்டில் உள்ள எம்.பி.- எம்.எல். ஏ.க்கள் 1581 பேர் மீது 13 ஆயிரத்து 500 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. போதிய நீதிபதிகள் மற்றும் கோர்ட்டுகள் இல்லாத காரணத்தால் அந்த வழக்குகள் நீண்ட காலமாக விசாரணை நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் இது சம்பந்தமாக அஸ்வினி குமார் உபாத்தியாயா என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது எம்.பி.- எம். எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

    நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்சு இதை விசாரித்தது.

    அப்போது ஏற்கனவே நீதிபதிகள் அளித்த ஆலோசனை தொடர்பாக விளக்கம் கேட்டனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் நீதிபதிகள் முன் கூறியதாவது:-

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

    இதன்படி முதல் கட்டமாக 12 கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 2 கோர்ட்டுகள் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும். மற்ற 10 கோர்ட்டுகள் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். அந்த கோர்ட்டுகள் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.

    அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த கோர்ட்டுகளுக்காக ரூ.7 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீது என்னென்ன வழக்குகள் இருக்கின்றன என்பதை சேகரிப்பதற்கு போதிய காலம் வேண்டியது இருக்கிறது.

    எனவே, அதற்கு அவகாசம் வேண்டும். அந்த விவரங்களை சேகரித்த பிறகுதான் மொத்தத்தில் எத்தனை கோர்ட்டுகள் தேவைப்படும் என்பதை கண்டறிய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியல்வாதிகள் மீதான முறைகேடு மற்றும் ஊழல் வழக்குகள் பல நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. சசிகலா மீது இருந்த 20 ஆண்டு கால வழக்கில் ஒரு ஆண்டுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்து தினகரன் மீது தேர்தல் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது.

    இதேபோல் எச்.ராஜா, கனிமொழி மீதான 2-ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. லல்லுபிரசாத், ராப்ரிதேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் மீதான வழக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நரேந்திரா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    புதிய கோர்ட்டுகள் அமைக்கப்பட்டதும் ஒவ்வொரு கோர்ட்டும் ஆண்டுக்கு 165 வழக்குகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீது 13 ஆயிரத்து 500 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவிலேயே அந்த வழக்குகள் தீர்வுக்கு வந்து விடும்.
    Next Story
    ×