search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா கண்டனம்
    X

    பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா கண்டனம்

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்த நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

    ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, மும்பை தாக்குதலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.



    இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சுயமாக ஒப்புக்கொண்ட மற்றும் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாதியை விடுதலை செய்து, மோசமான நடவடிக்கைகளை தொடர அனுமதித்து இருக்கும் செயல் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் மிகுந்த ஆத்திரத்தை அளித்துள்ளது’ என்றார்.



    தீவிரவாத செயல்களை மேற்கொள்ளும் தனிநபர் மற்றும் நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தானின் மெத்தனப்போக்கை இந்த நடவடிக்கை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து இருப்பதாக கூறிய அவர், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பாகிஸ்தான் முயன்று வருவதை இது காட்டுவதாகவும் தெரிவித்தார்.
    Next Story
    ×