search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர்- அமைச்சர்கள் வீடுகளிலும் விரைவில் சோதனை நடக்கும்: புகழேந்தி
    X

    முதல்வர்- அமைச்சர்கள் வீடுகளிலும் விரைவில் சோதனை நடக்கும்: புகழேந்தி

    எங்களின் வீடுகளிலும், சசிகலாவின் வீடுகளிலும் நடந்த சோதனை போல முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் விரைவில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என புகழேந்தி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை வேதனை அளிக்கிறது.

    இதற்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொண்டர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். சோதனை நடத்தும் போது எந்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் அங்கு வராதது வேதனை அளிக்கிறது. முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவரின் கருணைப்பார்வைக்காக போயஸ்கார்டனில் காத்து கிடந்தவர்கள் இன்று சோதனை நடந்த போது வராதது அவர்கள் பதவி சுகத்துக்காக எதையும் செய்பவர்கள் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.


    இந்த சோதனை குறித்து இன்று மைத்ரேயன் எம்.பி வருத்தம் தெரிவித்து இருக்கிறார். காரணம் எதுவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் சோதனை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

    சோதனை நடத்த தூண்டி விட்டு இன்று வேதனை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. மைத்ரேயனின் செயல் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் செயலாகும். இன்று எங்களின் வீடுகளிலும், சசிகலாவின் வீடுகளிலும் நடந்த சோதனை போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடப்பது உறுதி. விரைவில் இந்த சோதனை நடக்கும்.

    இதற்குரிய நேரம் வந்து கொண்டு இருக்கிறது. காலம் மாறும், காட்சிகளும் மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×