search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை: பிரதமர் மோடி விளக்கம்
    X

    ஜி.எஸ்.டி. வரி முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை: பிரதமர் மோடி விளக்கம்

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை, முப்பதுக்கும் மேற்பட்டோரிடம் கலந்து ஆலோசித்த பிறகே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என்று குஜராத் பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் குஜராத் மாநில மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். வருகிற 22-ந்தேதி மீண்டும் குஜராத் சென்று படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். நேற்று அவர் காந்திநகரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி பயந்தபடி உள்ளது. மற்ற மாநில தேர்தலில் தோற்றது போல குஜராத்திலும் தோற்று விடுவோமோ என்ற கவலையில் காங்கிரசார் உள்ளனர். இதனால் பா.ஜ.க. மீது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். மக்கள் இதை நம்ப மாட்டார்கள். எனவே காங்கிரசின் பொய் பிரசாரம் தோல்வியில்தான் முடியும்.

    குஜராத் சட்டசபை தேர்வானது வளர்ச்சி அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையே நடைபெறும் போராகும். இந்தப் போரில் குடும்ப அரசியலுக்கு பாரதிய ஜனதா கட்சி உறுதியான முடிவு கட்டும்.

    பொதுவாக குஜராத் மாநில மக்கள் என்றாலே காங்கிரஸ் கட்சிக்கு பிடிப்பதில்லை. குஜராத் தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் மதித்ததே இல்லை. அதனால்தான் குஜராத் மாநிலத்தை சேர்ந்த என்னை ஒழிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

    குஜராத் கலவர வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைக்க காங்கிரசார் காய்களை நகர்த்தினார்கள். ஆனால் முடியவில்லை. என் மீதான வெறுப்பும், கோபமும் காங்கிரசாருக்கு இன்னமும் உள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நான் மட்டுமே முடிவு எடுத்து அறிவித்து நடைமுறைப்படுத்தியதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து என் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். அதை மோடி மட்டுமே தீர்மானித்து விடவில்லை. அனைத்துக்கட்சிகள் மற்றும் அனைத்து மாநிலங்களும் ஒன்று சேர்ந்து ஆமோதித்த பிறகே ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் என்ற முறையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து நான் 30-க்கும் மேற்பட்டவர்களுடன் ஆலோசித்தேன். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், மேகாலயா மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. எனவே ஜி.எஸ்.டி. என்ற பெயரில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதை காங்கிரஸ் கைவிட வேண்டும்.

    இன்னும் சொல்லப் போனால் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதில் பா.ஜ.க.வுக்கு இணையாக காங்கிரஸ் கட்சிக்கும் சம பங்கு உண்டு. ஜி.எஸ்.டி.யின் முக்கிய அம்சங்களை வடிவமைத்ததே காங்கிரஸ் கட்சி தான்.

    இந்த புதிய வரி விதிப்பு திட்டம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைகள், புகார்கள் குறித்து நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக ஆய்வு செய்து வருகிறோம்.

    குறைகள் இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றை சரி செய்து, ஜி.எஸ்.டி.யில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள முயற்சி செய்யப்படும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இன்னும் கூட வியாபாரிகளிடம் தேவையற்ற பயம் உள்ளது. உங்கள் பழைய கணக்குகளை மோடி தோண்டி எடுத்து விடுவார் என்று வியாபாரிகளிடம் பயம் காட்டுகிறார்கள். நான் வியாபாரிகளுக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க விரும்புகிறேன்.

    வியாபாரிகளின் பழைய கணக்குகள், ஆவணங்கள் வந்த வகையிலும் ஆய்வு செய்யப்பட மாட்டாது. ஏனெனில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியல்ல.

    ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். அந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

    கணக்கில் வராத ரூ.3 லட்சம் கோடி முறையாக வங்கிகளுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் எதிர்மறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்.

    குறிப்பாக குஜராத் மாநிலத்துக்கு எதிராக செயல்படுவதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும். சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்துக்கு நேரு அடிக்கல் நாட்டினார். ஆனால் சர்தார் வல்லபாய் படேல் வகுத்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில் போட்டது.

    அதுபோல போபர்ஸ் விவகாரத்தில் மாதவசிங் சோலங்கியை பலிகடா ஆக்கினார்கள். நேரு குடும்பத்தை காப்பாற்ற சோலங்கியை முன்நிறுத்தி தப்பித்துக் கொண்டனர். இதையெல்லாம் குஜராத் மாநில மக்கள் மறந்து விடக்கூடாது.

    ஜி.எஸ்.டி., பணமதிப்பு அறிவிப்புகள் பற்றிய பொய் பிரசாரம் எடுபடாததால், தலித் மக்களுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுவதாக காங்கிரசார் புதிய குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். இந்தியாவில் அதிக எம்.பி.க்கள், அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்டே ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான்.

    எனவே வளர்ச்சி அரசியலை முன்னெடுத்து செல்ல பாரதிய ஜனதாவை ஆதரிக்க வேண்டும். உண்மை நிலையை மறைத்து தரம் தாழ்ந்து பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×