search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    30-ந்தேதிக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு
    X

    30-ந்தேதிக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு

    இந்த மாதம் 30-ந்தேதிக்கு முன் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்த மாதம் 30-ந்தேதிக்கு முன் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான காங்கிரசின் தலைவராக சோனியா காந்தி கடந்த 1998-ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறார். துணைத்தலைவராக அவரது மகன் ராகுல் காந்தி இருந்து வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், அதன் பிறகு நடந்த பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. சமீப காலமாக இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக கட்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு நடந்து வரும் உட்கட்சி தேர்தலுக்குப்பின், ராகுல் காந்தியின் நிலை உயர்த்தல் இருக்கும் என கருதப்பட்டு வந்தது.

    இது தொடர்பாக சோனியா காந்தியும் நேர்மறையான பதிலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ராகுல் காந்தி கட்சித்தலைவராவது எப்போது? என அவரிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அது விரைவில் நடக்கும்’ என்று பதிலளித்தார்.

    இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் நடந்து வந்த உட்கட்சி தேர்தல் தற்போது முடிவடைந்து உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 30-ந்தேதிக்குள் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தற்காலிக அட்டவணையை காங்கிரசின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சோனியாவிடம் வழங்கி உள்ளார்.

    அதன்படி வருகிற 30-ந்தேதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

    புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தற்காலிக தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டாலும், இறுதி அட்டவணையை கட்சியின் காரியக்கமிட்டிதான் முடிவு செய்யும். எனவே காரியக்கமிட்டி கூட்டத்தை வருகிற நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவது கட்சித்தொண்டர்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
    Next Story
    ×