search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் பிடிக்க பா.ஜ.க. வியூகம்: மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் பிடிக்க பா.ஜ.க. வியூகம்: மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 350 இடங்களுக்கு மேல் பெற வேண்டும். அதற்கு என்னென்ன செய்யயலாம் என்று மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

    புதுடெல்லி:

    2014 பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை காரணமாக நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. பாரதிய ஜனதா தனித்து மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைத்தது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2019 மே மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலிலும் கடந்த தேர்தல் போல வெற்றி கிடைக்குமா? என்று சொல்ல முடியாது. அதை விட பெரிய வெற்றியை பெறுவதற்கு பாரதிய ஜனதா வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக கட்சி தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக கட்சி மூத்த மந்திரிகள், மத்திய மந்திரிகள் ஆகியோரை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் டெல்லி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய மந்திரிகள் ரவிசங்கர பிரசாத், பியூஸ் கோயால், நரேந்திர சிங் தோமர், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், நிர்மலா சீத்தாராமன், மனோஜ்சின்கா,

    தேசிய பொதுச்செயலாளர்கள் முரளிதரராவ், கைலாஷ் விஜயவர்க்கியா, அனில் ஜெயன், ராம்மாதவ், இணை பொதுச் செயலாளர்கள் சவுதான்சிங், சதீஷ், சிவப் பிரகாஷ், சந்தோஷ் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அடுத்து சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவை நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைத்தால் தான் அதன் தாக்கம் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனவே, இந்த தேர்தல்களிலும் கட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமித்ஷா கேட்டு கொண்டார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 350 இடங்களுக்கு மேல் பெற வேண்டும். அதற்கு என்னென்ன செய்யயலாம் என்று ஆலோசனை நடத்தினார்.

    கடந்த தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. அதில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகள் எவை. அங்கு என்ன பலவீனம் உள்ளது? என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்பதையும் ஆய்வு செய்து அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படியும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி தற்போது என்ன நிலையில் உள்ளது? அதனுடைய பலம் எப்படி இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி அது பற்றிய தகவல்களை தனக்கு தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    எல்லா இடங்களிலும் இப்போதே தேர்தல் பணியை தொடங்கி விட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×