search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் தமிழ்நாடு இல்லம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காட்சி
    X
    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் தமிழ்நாடு இல்லம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காட்சி

    டெல்லியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 11-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 15-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    இதனிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக நேற்று திருச்சி வந்த அய்யாக்கண்ணு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களை லாரி ஏற்றி கொன்று விடுவதாக பா.ஜனதா நிர்வாகி ஒருவர் மிரட்டுவதாக புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.

    இந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு டெல்லி சென்றார்.

    இன்று காலை அவரை சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றனர். அங்கு இல்லம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த விவசாயிகள், கடன் பிரச்சினை, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததோடு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அதனை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Next Story
    ×