search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா. ஜனதாவை சமாளிக்க காங்கிரசுடன் நெருங்கும் மம்தா
    X

    பா. ஜனதாவை சமாளிக்க காங்கிரசுடன் நெருங்கும் மம்தா

    நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மம்தா இன்று டெல்லி வந்துள்ளார். அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மம்தா ஆட்சியை வீழ்த்திவிட்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மம்தாவுக்கு பல்வேறு இடையூறுகளையும் கொடுத்து வருகிறது.

    எனவே இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரசுடன் கைகோர்த்து செயல்பட மம்தா முடிவு செய்துள்ளார். இதுவரை காங்கிரசுக்கு எதிராகவே மம்தா செயல்பட்டு வந்தார். ஆனால் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் காங்கிரசுடன் கைகோர்ப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

    மேற்குவங்காளத்தில் 6 இடங்களுக்கான மேல்சபை எம்.பி. தேர்தல் அடுத்த மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 5 இடங்களில் வெற்றி பெறுவதற்காக எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு உள்ளன. மீதி ஒரு இடத்தை பிடிக்க காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    கம்யூனிஸ்டு அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் பதவி காலம் முடிவதையடுத்து அவருக்கான இடத்துக்கும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடக்கிறது. எனவே மீண்டும் இங்கு கம்யூனிஸ்டு அந்த இடத்தை பிடிப்பதற்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை.


    அந்த கட்சி வெற்றிபெற வேண்டும் என்றால் 42 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் 33 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். எனவே காங்கிரசின் தயவை கம்யூனிஸ்டு தேட வேண்டியது உள்ளது. அதே நேரத்தில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    எனவே காங்கிரக்கு திரிணாமல் காங்கிரசில் மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தால் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காங்கிரசுடன் நெருக்கம் காட்ட விரும்பும் மம்தா இதை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாமா? என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

    இது சம்மந்தமாக அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மம்தா இன்று டெல்லி வந்துள்ளார். அவர் சோனியாவை சந்தித்து இதுபற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் காங்கிரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி பாரதிய ஜனதாவை எதிர்கொள்ளும் திட்டத்தில் அவர் இருக்கிறார்.

    Next Story
    ×