search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ்வி பதவி விலக வேண்டும்: நிதிஷ்குமார் பிடிவாதம் - ராகுல்காந்தி தவிப்பு
    X

    தேஜஸ்வி பதவி விலக வேண்டும்: நிதிஷ்குமார் பிடிவாதம் - ராகுல்காந்தி தவிப்பு

    பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க ராகுல்காந்தி முயற்சி செய்தும், நிதிஷ் குமார் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளார்.
    புதுடெல்லி:

    லாலு பிரசாத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரெயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்- மந்திரியான தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றுள்ளது.

    இதையடுத்து தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியும், கூட்டணி கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் கூறி வருகிறார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    இந்த விவகாரம் பீகாரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சியிலும், பீகார் ஆட்சியை நீடிக்க செய்யும் சமரச முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    கடந்த வாரம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை டெல்லிக்கு அழைத்து பேசினார். அப்போது தேஜஸ்வி விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்டதும் நிதிஷ் குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த இயலாது என்று ராகுல்காந்தியின் சமரசத்தை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பவருக்கு ராகுல் துணை போவதற்கு அவர் ஆச்சரியத்தையும் வெளியிட்டார்.

    நிதிஷ்குமார் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பது ராகுலிடம் தவிப்பை ஏற்படுத்தியது. எனவே அவர் நிதிஷ்குமாரை மேற்கொண்டு வலியுறுத்தவில்லை.

    நிதிஷ்குமார் தன் முடிவில் உறுதியாக இருப்பதால் தேஜஸ்வி பதவி விலகுவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேஜஸ்வி விரைவில் பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×