search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு
    X

    ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு

    தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.
    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறாத சூழல் நிலவி வந்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.



    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந்தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

    இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக் கட்டை மீட்டெடுக்க தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அயராது மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இந்த நிலையில் ‘பீட்டா’ (இந்திய விலங்குகள் நல அமைப்பு) மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள், தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தன.

    இந்த மனுக்களை ஜனவரி 31-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கினார்கள். தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர்.

    அதே நேரத்தில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுக்களை ‘ரிட்’ மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த சட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் மீது விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பதில் அளிப்பதற்கான கால அவகாசம் எதுவும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அடிப்படையில் ‘பீட்டா’ அமைப்பினர், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ‘ரிட்’ மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    அந்த மனுவில், தமிழக அரசின் அவசர சட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், அது தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.

    மேலும் இந்த அவசர சட்டம் குறுக்கு வழியில் மிருகங்களை வதை செய்ய அனுமதிக்கிறது என்றும், இதனால் காளைகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாகவும் சில இடங்களில் மனிதர்கள் பெருமளவில் காயம் அடைந்ததாகவும், சில மரணங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    தமிழக அரசின் அவசர சட்டம் ஜல்லிக்கட்டை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்து இருப்பதால், அந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×