search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லைக்குள் நுழைந்து பாக். ராணுவம் தாக்குதல்: இரு ராணுவ வீரர்கள் பலி
    X

    இந்திய எல்லைக்குள் நுழைந்து பாக். ராணுவம் தாக்குதல்: இரு ராணுவ வீரர்கள் பலி

    இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.
    ஜம்மு:

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், எல்லையில் ஊடுருவல் செய்து இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    மேலும், இந்தியாவில் தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இதனால் இந்திய எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் இன்று மதியம் 2 மணிக்கு திடீரென ஊடுருவ முயன்றனர். அவர்கள் இந்திய எல்லையில் அரை கிலோ மீட்டர் தூரம் நுழைந்து ராணுவ முகாம்கள் இருக்கும் பகுதியை நோக்கி துப்பாக்கி சூடுநடத்தினர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர், பாக். படையினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர்.

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஓராண்டில் பூஞ்ச் பகுதியில் அத்துமீறி நடந்த 3-வது தாக்குதல் இது. இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் பலியாகினர். பாக். தரப்பில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    இதேபோல், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

    தெற்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகே பயங்கரவாதக் கும்பல் ஊடுருவ முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, அந்த பயங்கரவாதியை நோக்கி ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுகள் துளைத்து ஒரு பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், வேறு யாராவது அந்த பகுதியில் பதுங்கி உள்ளனரா? என ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×