search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுத்தப்படுவாரா?
    X

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுத்தப்படுவாரா?

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நிறுத்தப்படுவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறார்.

    ஜூலை 17- ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா வேண்டுகோள் விடுத்தது அதை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன.

    பா.ஜனதாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் சார்பில் பா.ஜனதாவின் தலித் வேட்பாளரை எதிர்த்து தலித் பிரிவைச் சேர்ந்தவரையே நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்காக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்டோர் பெயர்களை பரிசீலித்தது. கடைசியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    இதற்கிடையே எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பொது வேட்பாளராக மீரா குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இதே போல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், அணு விஞ்ஞானி அனில் ககோத்கர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை ஏற்கனவே சிவசேனா கட்சி சிபாரிசு செய்து இருந்தது. அதை பாரதிய ஜனதா நிராகரித்து விட்டது. இதனால் சிவசேனா அதிருப்தியில் உள்ளது. எனவே சுவாமிநாதன் பெயரை அறிவித்தால் சிவசேனாவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்றும், தலித் வேட்பாளரை எதிர்த்து விவசாயிகளின் வேட்பாளர் என்ற பிரச்சாரத்தை முன் வைக்கலாம் என்றும் காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    2007-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரசின் பிரதிபா பட்டேலை எதிர்த்து பா.ஜனதா பைரோன் சிங் செகாவத்தை நிறுத்தியது.

    இதில் ஆண் வேட்பாளர் பெண் வேட்பாளர் என்ற பாகுபாடு எழவில்லை. எனவே தற்போதும் தலித் வேட்பாளர் என்ற பிரசாரம் எடுபடாது என்று காங்கிரஸ் நம்புகிறது.



    வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர். உள்பட 17 கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அம்பேத்கார் பேரன் பிரகாஷ் அம்பேத்கார், காந்தி பேரன் கோபால கிருஷ்ணகாந்தி ஆகியோரது பெயர்களும் எதிர்க்கட்சி வேட்பாளர் பரிசீலனையில் இடம் பெற்றுள்ளது.
    Next Story
    ×