search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்வை முன்கூட்டியே சொன்ன சாமியார்
    X

    ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்வை முன்கூட்டியே சொன்ன சாமியார்

    பாரதிய ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த் தேர்வை முன்கூட்டியே சாமியார் ஒருவர் கூறியதாக பாஜக துணை தலைவர் பிரபாத்ஜா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மிக ரகசியமாக வைத்து அவரது பெயரை அறிவித்துள்ளனர்.

    ஆனால், இவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என முன்கூட்டியே சாமியார் ஒருவர் கூறியதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பாரதிய ஜனதா துணை தலைவர் பிரபாத்ஜா வெளியிட்டுள்ளார்.

    அந்த சாமியாரின் பெயர் ராம் பத்ராச்சாரியா. இவருக்கு கண் தெரியாது. உத்தரபிரதேச மாநிலம் சித்ரபூர் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அவர் இருக்கிறார்.

    கடந்த 3-ந்தேதி ராம்நாத் கோவிந்திடம் சாமியார் ராம் பத்ராச்சாரியா இந்த தகவலை தெரிவித்ததாக பிரபாத்ஜா கூறினார். அவர் இது சம்பந்தமாக தெரிவித்ததாவது:-

    சீதாதேவி பிறந்த இடமான பீகாரில் சீதாமர்கி மாவட்டம் புனோரதமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்துடன் நானும் கலந்து கொண்டேன்.

    இந்த நிகழ்ச்சியில் சாமியார் ராம் பத்ராச்சாரியாவும் கலந்து கொண்டார். அப்போது ராம்நாத் கோவிந்திடம் சாமியார் ராம் பத்ராச்சாரியா நீங்கள் இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு (ஜனாதிபதி) விரைவில் வருவீர்கள் என்று கூறினார். அதன்படி அவர் ஜனாதிபதி வேட்பாளராக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

    ராம்நாத் கோவிந்த் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் மிகவும் புலமை பெற்றவர். இது, பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    முதலில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டது. ஆனால், பழங்குடியின மக்கள் ஜார்கண்ட், ஒடிசா, சதீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே அதிகமாக உள்ளனர். ஆனால், தலித் மக்கள் நாடு முழுவதும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் தலித்துகள் இருக்கிறார்கள்.

    எனவே, தலித் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால்தான் பாராளுமன்ற தேர்தலில் தலித் ஓட்டுகளை பெற முடியும் என கருதி ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×