search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போலீஸ்காரர்: சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுகள்
    X

    ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போலீஸ்காரர்: சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுகள்

    பெங்களூர் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதியின் காரை நிறுத்தி, அந்த வழியாக சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை பெங்களூர் நகருக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் புடைசூழ ராஜ்பவனுக்கு சென்று கொண்டிருந்தார்.

    டிரைனிடி சர்க்கிள் பகுதி வழியாக ஜனாதிபதியின் கார் கடந்த செல்வதற்கான முன்னேற்பாடுகளில் போக்குவரத்து போலீசார் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    இதனால், அந்த நான்முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு நோயாளியை ஏற்றியபடி, ஹெச்.ஏ.எல். பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைந்து சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சைரன் ஒலித்தபடி, சிக்கிக்கொண்டு தவிப்பதை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா கவனித்து விட்டார்.



    அந்தப் பாதையை ஜனாதிபதியின் கார் கடந்து செல்வதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், அவருக்கு, ’ஒவ்வொரு இந்தியரும் வி.ஐபிக்கள் தான்’ என்ற பிரதமர் மோடியின் வார்த்தைகளே நினைவுக்கு வந்தது.

    அதனை செயல்படுத்தும் வகையில், உடனே அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். டிரைனிடி சர்க்கிள் பகுதியில் ஆம்புலன்ஸ் சிக்கித் தவிக்கும் விபரத்தை வாக்கி-டாக்கி மூலம் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து, ஜனாதிபதியின் கார் அந்த பகுதியை கடப்பதற்குள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதன்மூலம், ஜனாதிபதியின் காரை தடுத்து நிறுத்திய நிஜலிங்கப்பாவின் இந்த செயலை கண்ட அப்பகுதியை சேர்ந்த பலர் மனமார பாராட்டு தெரிவித்தனர். மேலும், பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் துறையின் இணையத்தளத்தில் பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ,போலீஸ் கமிஷனர் பிரவின் ட்விட்டரில் பதிவிடுகையில், விரைவில் நிஜலிங்க்ப்பாவுக்கு வெகுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாராட்டுகளால் நிஜலிங்கப்பா பெங்களூரில் ஒரே நாளில் ஹீரோவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×