search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: கொள்ளையன் நாதுராம் அதிரடி கைது?
    X

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: கொள்ளையன் நாதுராம் அதிரடி கைது?

    சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையன் நாதுராம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சென்னை:

    சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையன் நாதுராம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளிகளான ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை பிடிப்பதற்காக தமிழக தனிப்படை போலீசார் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றனர்.



    அங்குள்ள பாலி மாவட்டம் ராமவாஸ் என்ற கிராமத்தில் பதுங்கி இருந்த நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்களும், அவர்களது கூட்டாளிகளும் போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் தனிப்படையில் இடம் பெற்றிருந்த சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், போலீஸ்காரர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் கொலை உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நாதுராமின் கூட்டாளி தினேஷ் சவுத்ரி ராஜஸ்தான் போலீசாரிடம் கடந்த 14-ந்தேதி பிடிபட்டார். இதேபோல் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்து சென்னை தனிப்படை போலீசாரை தாக்கியதாக, அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வரும் தேஜாராம், அவரது மனைவி பிந்தியா அவர்களது 2 மகள்கள் ஆகிய 4 பேரை ராஜஸ்தான் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இதற்கிடையே, ராஜஸ்தான் சென்றிருந்த இணை கமிஷனர் சந்தோஷ்குமார் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்பட தனிப்படை போலீசார் அனைவரும் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

    அவர்கள், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து நாதுராமின் பின்புலம் பற்றியும், அவன் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களையும் விரிவாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கை நேரடியாக விசாரித்து வரும் ராஜஸ்தான் பாலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் பார்கவ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விபத்து அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    முனிசேகர் தவறுதலாக பெரியபாண்டியன் மீது சுட்டுவிட்டாரா? அல்லது அவர் தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்தியதில் குண்டு பாய்ந்து விட்டதா? என்பது குறித்து அதில் தெளிவாக கூறப்படவில்லை. இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது விபத்து வழக்கை ராஜஸ்தான் மாநில போலீசார் பதிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் வெளியானது.

    அதை ராஜஸ்தான் மாநில போலீசார் உறுதி செய்யவில்லை. சென்னை நகர போலீசாரும் முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவல் தங்களுக்கு வரவில்லை என்றனர்.



    இந்த நிலையில் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது கணவர் பதுங்கி இருக்கும் இடத்தை மஞ்சு கக்கினார். இதையடுத்து ராஜஸ்தான் போலீசார் அதிரடியாக செயல்பட்டு நாதுராமை நேற்றிரவு கைது செய்தனர்.

    இந்த தகவலை சென்னையில் உள்ள ராஜஸ்தான் மாநில நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தனர்.

    என்றபோதிலும் ராஜஸ்தான் மாநில போலீசாரோ அல்லது தமிழக போலீசாரோ இதை உறுதி செய்யவில்லை. தங்களுக்கு இதுபற்றி எந்த தகவலும் வரவில்லை என்று சென்னை நகர போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×