search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழே விழப்போகும் தி.மு.க.வுக்குத்தான் ஊன்ற ‘கை’ தேவைப்படும்: மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்
    X

    கீழே விழப்போகும் தி.மு.க.வுக்குத்தான் ஊன்ற ‘கை’ தேவைப்படும்: மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

    கீழே விழும்போதுதான் ஊன்ற ‘கை’ தேவைப்படும், எனவே தி.மு.க.வுக்கு தேவைப்படலாம் என்று மு.க.ஸ்டாலினுக்கு கருத்துக்கு, தமிழிசை சவுந்தரராஜான் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    உலக மீனவர் தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் மீன் உணவு திருவிழாவை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா கட்சி தொடர்ந்து 11-வது ஆண்டாக உலக மீனவர் தினத்தை கொண்டாடுகிறது. மீன் உணவின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து சொல்வதும், மீனவர்களுக்கு துணையாக இருப்பதும்தான் எங்கள் குறிக்கோள்.

    பல கட்சிகள் மீனவர்களை வாக்கு வங்கியாகத்தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கினார்.

    ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சுடப்பட்டது பற்றி விசாரணை நடத்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவரது கருத்தை இங்குள்ள அரசியல் கட்சிகள் திரித்து கூறுகின்றன.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வளவு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா?

    கவர்னர் ஆய்வு நடத்தியதை மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவித்ததாக தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் அமைச்சர்களும், பொது மக்களும் கவர்னரை பாராட்டுகிறார்கள்.

    சுயாட்சி என்று சொல்லியே நாட்டை சூறையாடியது போதாதா? கவர்னரின் செயல்பாடு எந்த விதத்திலும் மாநிலத்தின் பெருமைக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படுத்தாது.

    பா.ஜனதா தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று சொன்ன மு.க.ஸ்டாலின் இப்போது கை ஊன்ற முடியாது என்று கூறுகிறார்.



    அவருக்கு உண்மை புரிந்து இருக்கிறது. கீழே விழும்போதுதான் ஊன்ற ‘கை’ தேவைப்படும். எனவே அது தி.மு.க.வுக்கு தேவைப்படலாம். நாங்கள் வலுவாக காலூன்றி நிற்கிறோம்.

    காங்கிரசை பக்கத்தில் வைத்துக் கொண்டு பா.ஜனதாவையும், அ.தி.மு.க.வையும் மட்டும் விமர்சிப்பதில் இருந்தே மு.க.ஸ்டாலினின் உணர்வு புரிகிறது.

    தமிழகத்தில் பா.ஜனதா எந்த அளவு வளர்ந்து இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் பியூஸ் நிறுவனம் நடத்தி இருக்கும் கருத்து கணிப்பு ஒரு சான்று ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×