search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-ந் தேதி மதுரை வருகை
    X

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-ந் தேதி மதுரை வருகை

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அன்று இரவு தல்லாகுளம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
    மதுரை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 18-ந்தேதி சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

    இதனை தொடங்கி வைப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அன்று இரவு தல்லாகுளம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (18-ந்தேதி) காலை 7 மணிக்கு கோரிப்பாளையம், யானைக்கல், கீழவாசல், விளக்குத்தூண் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அம்மனை தரிசனம் செய்தபின் தளவாய் அக்ரஹாரம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    இதனை தொடர்ந்து மதியம் சிவகங்கையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க செல்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருவதையொட்டி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பூரண கும்ப மரியாதை அளித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் முதல்வரை வரவேற்கிறார்கள். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கையில் 18-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 17-ந் தேதி முதல்வர் மதுரை வருகிறார்.

    நகர் பகுதி வழியாக விருந்தினர் மாளிகைக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (12-ந்தேதி) தெப்பக்குளத்தில் உள்ள சந்திராகுழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

    எனவே கூட்டத்தில் இன்னாள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×