search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
    X

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

    புதுவையில் டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இவர்களது ரத்த மாதிரியை பரிசோதித்து பார்த்ததில் 100-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் சாரம் ஞானப்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 26). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து போனார்.

    டெங்கு காய்ச்சலால் இறந்து போன இந்துமதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவர் இறந்து போனதால் இரு வீட்டினரும் சோகத்துக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கேசவ் என்பவர் புதுவை கொட்டுப்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கேசவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். இவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

    புதுவையில் டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    Next Story
    ×