search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    கொடுமுடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    கொடுமுடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி சத்திரத்தில் 115 வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு காவிரி குடிநீர் சப்ளை கிடையாது.

    அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மேல் நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 8 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனாலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லையாம். இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    அவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-கரூர் சாலையில் இன்று காலை ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் திரண்டனர்.

    அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு பக்கத்திலும் பஸ்களும், வாகனங்களும் நின்றன.

    முக்கியமான சாலை என்பதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்து பாதிப்பை குறைத்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் குடிநீர் பற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட பெண்களும், பொதுமக்களும் சாலையில் இருந்து எழுந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், பொதுமக்களும் கலைந்து செல்லவில்லை. ரோட்டில் ஓரத்தில் திரண்டு நின்றனர்.

    அதிகாரிகள் வந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி அவர்கள் அங்கேயே நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நீடித்தது.

    Next Story
    ×