search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
    X

    நீட் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    சென்னை:

    நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டிற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்ட வரைவுக்கு 2 மத்திய அமைச்சகங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டன.

    சுகாதாரத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இன்று ஒப்புதல் பெற்று விடுவோம். கல்வி உரிமையை பெற மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூறிய கருத்தை வைத்து 2 மத்திய அமைச்சகம் ஒப்புதல் தந்து விட்டன. இது தமிழக அரசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

    மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காக அரசு போராடுவது போலவும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அரசு எதிராக செயல்படுவது போலவும் சித்தரிக்கப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டுமல்ல சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.


    இதனால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகும் என்ற தவறான கருத்தை பரப்ப வேண்டாம்.

    நாட்டிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 456 ஆகும். இவை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மூலம்தான் நிரப்பப்படுகிறது. அந்த இடங்கள் தமிழக நீட் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    இது தவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள அனைத்து இடங்களும் நீட் அடிப்படையில் சேர்க்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை நிரப்ப விதி இருக்கும் போது அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 22 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பல ஆயிரம் கோடி செலவு செய்து மருத்துவ கல்லூரிகளை தொடங்கி கட்டமைப்புகளை உருவாக்கி தமிழக மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு இல்லையென்றால் எப்படி போராடாமல் இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×