search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வு விலக்கு: மத்திய அரசிடம் அவசர சட்டம் தாக்கல்- 17-ந்தேதி முதல் கலந்தாய்வு?
    X

    ‘நீட்’ தேர்வு விலக்கு: மத்திய அரசிடம் அவசர சட்டம் தாக்கல்- 17-ந்தேதி முதல் கலந்தாய்வு?

    தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிட்டால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ‘கட்ஆப்’ மார்க் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    ஆனால் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

    ‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீதமும் உள் இட ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழக அரசின் இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என தீர்ப்பு அளித்தது.

    சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

    இதற்கிடையே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தருமாறு விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

    இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    எனவே ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப் பட்டியலை தயாரித்து வெளியிடவும், கலந்தாய்வை வருகிற 17-ந் தேதி தொடங்கவும் திட்டமிட்டிருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், “கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இந்த ஒரு வருடம் மட்டும் அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது” என்றார்.

    இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வது என்றும் இதற்காக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் ஆகியோர் நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை தயார் செய்து எடுத்துச் சென்றனர்.

    இன்று காலையில் அவர்கள் மத்திய உள்துறை மந்திரி, மத்திய சுகாதாரத் துறை மந்திரி உள்ளிட்டவர்களை சந்தித்து, அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை கொடுத்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டம் உடனடியாக வெளியிடப்படும்.

    இதன் மூலம் பல மாதங்களாக நீடித்த ‘நீட்’ பிரச்சனை முடிவுக்கு வர உள்ளது.

    தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிட்டால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ‘கட்ஆப்’ மார்க் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×