search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: புதுவை சட்டசபையில் வாக்குப்பதிவு
    X

    ஜனாதிபதி தேர்தல்: புதுவை சட்டசபையில் வாக்குப்பதிவு

    ஜனாதிபதி தேர்தலையொட்டி புதுச்சேரி சட்டபேரவையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. அம்மாநில முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்.
    புதுச்சேரி:

    ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

    புதுவையில் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் ஓட்டு போடுவதற்காக சட்டசபை கமிட்டி அறை வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டு இருந்தது. டெல்லியில் இருந்து விசே‌ஷமாக வரவழைக்கப்பட்ட வாக்குப் பெட்டி அங்கு வைக்கப்பட்டு இருந்தது.

    காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் ஏஜெண்டாக லட்சுமி நாராயணன், பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் ஏஜெண்டாக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வக்கீல் பக்தவச்சலமும், அ.தி.மு.க. தரப்பில் அன்பழகனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இவர்கள் முன்னிலையில் இன்று காலை 7.10 மணிக்கு அறையின் சீல் திறக்கப்பட்டு, வாக்குப்பெட்டி கமிட்டி அறைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி திறந்து காட்டப்பட்டு பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்பட்டது.

    இந்த பணிகளை மத்திய புள்ளியியல்துறை இணை செயலாளரும், புதுவை ஜனாதிபதி தேர்தல் பார்வையாளருமான அருண்குமார் யாதவ், புதுவை தேர்தல் ஆணையாளர் கந்தவேலு ஆகியோர் பார்வையிட்டனர்.

    காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலாவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஓட்டு போட்டார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஓட்டு போட்டனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்-தி.மு.க.வைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து வந்து ஓட்டு போட்டனர். அவர்களை தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் ஓட்டு போட்டார்.

    சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் பகல் 11.30 மணி அளவிற்கு வந்து ஓட்டு போட்டார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது காரில் சட்டசபைக்கு அழைத்து வந்தார்.

    இதைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ஓட்டு போட்டனர்.

    புதுவை எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 16 ஆகும். 30 எம்.எல்.ஏ.க்களின் ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பு 480. புதுவையில் 2 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் டெல்லியில் ஓட்டு போட்டனர்.
    Next Story
    ×