search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உயருகிறது
    X

    சென்னையில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உயருகிறது

    தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் ஆலோசித்த போது அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட சொத்துவரி, குடிநீர் வருவாயை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் வீட்டு வரி, குடிநீர்வரி பல வருடங்களாக பழைய வரியே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

    வீட்டு வரியை சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகளில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்து விட்டதால் மன்ற கூட்டங்கள் நடைபெறவில்லை. தற்போது தனி அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதால் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

    இதன் ஒரு கட்டமாக சொத்துவரி, குடிநீர் வரியை சீராக்கி அதிகப்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

    மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் ஆலோசித்த போது அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட சொத்துவரி, குடிநீர் வருவாயை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை சொத்து வரி இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது. அண்ணாசாலை, போயஸ்கார்டன், கோபாலபுரம், சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர்,வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்பட பல இடங்களில் வீட்டு வரி குறைவாகவும், அம்பத்தூர், முகப்பேர், ஆலந்தூர், மாதவரம் போன்ற புறநகர் பகுதிகளில் வீட்டுவரி 3 மடங்கு அதிகம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு வரி, குடிநீர்வரியை மீண்டும் உயர்த்தும் போது ஒரே சீரான வரியை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி 91-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முகப்பேர் பி.வி. தமிழ்ச்செல்வன் (காங்) கூறியதாவது:-

    சென்னையில் வீட்டு வரியை ஒழுங்குபடுத்துமாறு பலமுறை நான் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசி இருக்கிறேன்.

    சென்னையில் வீட்டு வரியை சதுரஅடிக்கு 60 பைசா வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அம்பத்தூர், மாதவரம், ஆலந்தூர் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களிடம் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னையில் வீட்டுவரி 60 பைசா என்றால் அம்பத்தூர், முகப்பேரில் சதுர அடிக்கு 3 ரூபாய் 39 பைசா வீதம் கணக்கிட்டு வசூலிக்கிறார்கள். மாதவரத்தில் 4 ரூபாய் வீதம் கணக்கிடுகிறார்கள்.

    தமிழ்நாட்டிலேயே வீட்டுவரி அதிகம் வசூலிக்கப்படும் பகுதி ஆலந்தூர் ஆகும். இங்கு சதுர அடிக்கு ரூ 6.50 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள்.

    கடைகளுக்கு சதுரஅடிக்கு 14 ரூபாய் வீதம் கணக்கிட்டு வாங்கப்படுகிறது. சென்னைக்கும் புறநகர் பகுதிக்கும் ஏன் இந்த வித்தியாசம்? இதைத்தான் ஒழுங்குபடுத்தி ஒரே சீரான வரியை விதிக்குமாறு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதில் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது. இது பற்றி ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட கமிட்டி போடப்பட்டது. அதன் முடிவு என்ன ஆனது என்று தெரியவில்லை.

    இது மட்டுமல்ல குடிநீர் வழங்காத பகுதிகளுக்கும் குடிநீர் கட்டணம் செலுத்துமாறு குடிநீர் வாரியம் பில் அனுப்பி வருகிறது. இதையெல்லாம் அரசு முறைப்படுத்த வேண்டும்.

    எங்களது கோரிக்கை என்னவென்றால், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் ஒரே சீரான வரியை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

    இதை செயல்படுத்தாமல் ஏற்கனவே அதிகம் வாங்கும் பகுதிகளுக்கு கூடுதலாக வீட்டு வரியை உயர்த்தினால் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
    Next Story
    ×