search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பாலத்தில் இருந்து 70 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் தண்டவாளத்தில் விழுந்தது
    X

    மேம்பாலத்தில் இருந்து 70 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் தண்டவாளத்தில் விழுந்தது

    குன்னூர் அருகே மேம்பாலத்தில் இருந்து 70 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
    குன்னூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 50). வியாபாரி. இவர் தனது நண்பருடன் வியாபார விஷயமாக ஊட்டிக்கு வந்தார். பின்னர் சிங்காரவேலன் குன்னூர் அருகே உள்ள கேத்தியில் இருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் நேற்று அதிகாலை எல்லநள்ளியில் டீ குடிப்பதற்காக சிங்காரவேலன் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    குன்னூர் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தைக்குட்டி சாலையை கடந்து சென்றது. ரோட்டில் திடீரென்று சிறுத்தைக்குட்டியை பார்த்ததும் சிங்காரவேலன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் திணறினார். கண் இமைக்கும் நேரத்தில் கார் மேம்பாலத்தில் இருந்து 70 அடி பள்ளத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தை நோக்கி பாய்ந்து விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. தண்டவாளத்தில் கார் விழுந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த சிங்காரவேலனை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஊட்டி ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 7.45 மணிக்கு குன்னூரிலிருந்து ஊட்டிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. கேத்தி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கார் விழுந்து கிடந்ததால் அருவங்காடு ரெயில் நிலையத்தில் மலை ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் அகற்றப்பட்ட பின்னர் 1 மணி நேரம் தாமதமாக அருவங்காட்டிலிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
    Next Story
    ×