search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள்: குஷ்பு தாக்கு
    X

    முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள்: குஷ்பு தாக்கு

    கூவத்தூர் பேர பாக்கிகளை வசூல் செய்வதற்காகவே முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக குஷ்பு கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அரசின் ஒரு ஆண்டு ஆட்சி பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    ஆட்சி நடந்தால்தான் ஆட்சியை பற்றி சொல்ல முடியும். அம்மையார் ஜெயலலிதா வெற்றி பெற்றதும் 6 மாதம்வரை வெற்றி கொண்டாட்டத்திலேயே காலத்தை கடத்தினார்கள். செப்டம்பர் மாதம் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் மொத்தமும் ஸ்தம்பித்து நின்றது. டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணம் அடைந்ததும் சுத்தம். எதுவும் நடக்கவில்லை.

    நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று நாற்காலிக்காக கட்சிக்குள் போட்டி போடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு கனவில் வாழ்கிறார்கள்.

    தமிழகத்துக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சியில் இருந்து அ.தி.மு.க. போக வேண்டும். இதை ஒரு தமிழக குடிமகளாகவும் இருந்து சொல்கிறேன்.

    இதற்கு முன்பு 5 ஆண்டுகள் அம்மையார் ஜெயலலிதா ஆட்சி செய்தார். அப்போது என்ன நடந்தது? இருந்த கம்பெனிகள் மூடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் நஷ்டப்பட்டனர்.

    தமிழக விவசாயிகள் டெல்லியில் போய் போராடினார்கள். தரையில் புரண்டார்கள், புடவை கட்டினார்கள், எலிகளை கடித்தார்கள், அப்படி இருந்தும் பிரதமர் மோடி இரங்கவில்லை. அவருக்கு எல்லோரையும் பார்க்க நேரம் இருந்தது. ஆனால் விவசாயிகளை சந்திக்க மட்டும் நேரம் கிடைக்காமல் போனது.

    கடமைக்காக டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்த முதல்-அமைச்சர் அதன் பிறகு விவசாயிகளுக்கு என்ன செய்தார்?

    நான் உண்டு. என் பதவி உண்டு. என் நாற்காலி உண்டு என்று ஒவ்வொருவரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஒரு ஓட்டு போட்ட மக்களுக்கு 3 முதல்வர்களை தந்துள்ளார்கள். அதில் 2 முதல்வர்கள் மக்கள் எதிர் பாராதவர்கள்.

    இனியும் மக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டதால்தான் பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்க முயற்சித்தார்கள். அதன் விளைவை தினகரன் அனுபவிக்கிறார். இரட்டை இலை சின்னத்துக்காக போராடினார்கள். அந்த சின்னத்தில் ஜெயலலிதாவையும் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் தலைவர் இருக்கிறார். அதற்காகத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.


    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் பிரதமரை சந்திக்க அவசர அவசரமாக சென்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பா.ஜனதா எப்படி ஆட்சியை பிடித்தது என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.

    இதனால்தான் தொடக்க ஆட்டக்காரராக கீழே இறங்கி சிங்கிள் ரன்னாவது எடுக்க வேண்டும் என்ற ரீதியில் பா.ஜனதா செயல்படுகிறது.

    தனித்தனி குழுக்களாக சென்று முதல்-அமைச்சரை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வருவது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. யாரும் மக்களுக்காக நன்மை செய்ய வேண்டும் என்று முதல்வரை சந்திக்கவில்லை. கூவத்தூரில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போதைய பேர பாக்கிகளை வசூல் செய்வதற்காகவே நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலை மாறணும். இதற்கு தேர்தல் வரவேண்டும். விரைவிலேயே தேர்தல் வரும். யாரும் கவிழ்க்க வேண்டியது இல்லை கவிழ்ந்துவிடும். மக்களே இந்த ஆட்சியை விரட்டி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×