search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் வாலிபரை கொன்று பைக்கில் பிணத்தை கடத்தி சாலையில் வீசிய கொடூரம்
    X

    வேலூரில் வாலிபரை கொன்று பைக்கில் பிணத்தை கடத்தி சாலையில் வீசிய கொடூரம்

    வேலூரில் வாலிபரை அடித்து கொலை செய்து பிணத்தை பைக்கில் கடத்தி சென்று சாலையில் வீசி விட்டு தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூரில் இருந்து இன்று காலை 6 மணியளவில் 2 பைக்குகளில் 5 வாலிபர்கள் முள்ளிப்பாளைம் வழியாக கொணவட்டம் நோக்கி அதிவேகத்தில் சீறி பாய்ந்தபடி சென்று கொண்டிருந்தனர். ஒரு பைக்கில் 3 பேரும், மற்றொரு பைக்கில் 2 பேரும் பயணம் செய்தனர்.

    இதில் 3 பேர் வந்த பைக்கில் நடுவில் இருந்த ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் சுய நினைவின்றி மயக்கமடைந்து காணப்பட்டார். அவரது கால்கள் சாலையில் தேய்ந்து சென்றது.

    கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் பைக்குகளை ஏற்றி இறக்கிய போது, நிலைத்தடுமாறினர்.

    அப்போது விரிஞ்சிபுரம் போலீஸ்காரர் தங்கவேலு, கொணவட்டம் புறக்காவல் நிலையத்தில் இரவு காவல் பணியை முடித்து விட்டு, கொணவட்டம் பைபாஸ் சாலையோரம் உள்ள டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

    பைக்குகளில் சென்ற வாலிபர்கள் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்துவதை போல் சென்றதை அவர் பார்த்தார். கொணவட்டம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சென்ற வாலிபர்கள் பைக்குகளை நிறுத்தினர்.

    மயக்கமடைந்து காணப்பட்ட வாலிபரை, உடன் வந்த 4 வாலிபர்களும் தூக்கி பாலத்தின் அடியில் வீசினர். இதனை பார்த்த போலீஸ்காரர் தங்கவேலு, பின் தொடர்ந்து சென்று வீசப்பட்ட வாலிபர் உடலை பார்வையிட்டார்.

    வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில், முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. வாலிபரை கொன்று விட்டு உடலை பைக்கில் கடத்தி வந்து 4 வாலிபர்களும் வீசியது தெரியவந்தது.

    போலீஸ்காரரை கண்டதும் உடலை வீசிய 4 பேரும் தப்பிச் செல்வதற்காக பைக்கில் மீண்டும் முள்ளிப்பாளையம் வழியாக வேலூர் நோக்கி திரும்பினர். அவர்களை பிடிப்பதற்காக போலீஸ்காரர் விரட்டினார்.

    பொதுமக்களையும் சத்தம் போட்டு உதவிக்கு அழைத்தார். பொதுமக்களும் பைக்கில் விரட்டினர். 4 வாலிபர்களும் பைக்கில் கொணவட்டம் திடீர் நகரில் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் பைக்குகளை மறித்து வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

    இதையடுத்து பைக்குகளை அங்கேயே போட்டு விட்டு, 4 பேரும் குறுக்குப்பாதை வழியாக கஸ்பா நோக்கி தப்பி ஓடினர். போலீஸ்காரர் தங்கவேலு, உடனடியாக வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தெற்கு போலீசார் கஸ்பா பகுதிக்கு விரைந்து வந்தனர். தப்பி வந்த 4 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர். அவர்கள், போலீஸ்காரர்களையும் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    தப்பிய 4 வாலிபர்களும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தெரிந்தனர். அவர்களை அடையாளம் கண்டு வலை விரித்து பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட வாலிபர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயதிருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×