search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகளை பிச்சை எடுக்க வைத்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    யானைகளை பிச்சை எடுக்க வைத்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

    யானைகளை பிச்சை எடுக்க வைத்ததற்கு தலைமை வனபாதுகாவலர் விதித்த அபராதத்தை செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சேகர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘என்னிடம் சுமா, ராணி’ என்ற இரண்டு யானைகள் உள்ளன. இதில், சுமா யானையை, காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விழாவுக்காக கடந்த ஆண்டு மே 17 முதல் 30-ந் தேதி வரை அனுப்பி வைத்தேன். யானையுடன் ஒரு பாகன், உதவி பாகன் ஆகியோர் சென்றனர். இந்த யானையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்ல தமிழ்நாடு மாநில தலைமை வன பாதுகாவலரிடம் முறையான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

    இந்த நிலையில், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விழாவுக்கு கொண்டு செல்லப்பட்ட யானை சுமாவை, பொது மக்களை ஆசீர்வதிக்க வைத்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

    இதனடிப்படையில், இந்த யானையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வழங்கிய உரிமத்தை ரத்து செய்த தலைமை வன காப்பாளர், யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தியதற்காக அபராதமும் விதித்துள்ளார். எனவே, உரிமத்தை ரத்து செய்த அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘யானைகளை பிடித்து வளர்க்கும் (மேலாண்மை மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் படி, யானைகளை பொது மக்களை ஆசீர்வதிக்க வைத்து, அவர்களிடம் இருந்து பணம் பெறுதல் என்பது குற்றமாகும். அதுவும், இதுபோன்ற செயல் யானைகளை பிச்சை எடுக்க வைப்பதாகும். இதை ஏற்க முடியாது.

    மேலும், யானைகளை பிச்சை எடுக்க வைப்பதும் சட்டப்படி கடும் குற்றமாகும். அதனால், தலைமை வனபாதுகாவலர் விதித்த அபராதத்தை மனுதாரர் செலுத்த வேண்டும். அந்த யானைகளை பராமரிக்கும் பாகன், உதவி பாகன் ஆகியோரை வனத்துறை வழங்கும் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும். இந்த பயிற்சிக்கான கட்டணத்தை மனுதாரர் சேகர் வழங்க வேண்டும். மேலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யானைகளை கொண்டு செல்ல உரிய உரிமத்தை வழங்கும் படி, அனைத்து ஆவணங்களுடன், தலைமை வன காப்பாளரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×