search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பழங்களில் மறைந்துள்ள ஆபத்து: உடலுக்கு பயன் தரும் பழங்களை தேர்வு செய்வது எப்படி?
    X

    பழங்களில் மறைந்துள்ள ஆபத்து: உடலுக்கு பயன் தரும் பழங்களை தேர்வு செய்வது எப்படி?

    மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், இனிப்பு கரைசல் மற்றும் நிறமிகள் ஏற்றப்பட்ட தர்ப்பூசணி, கல் வைத்து பழுத்த மாம்பழம் என சுகாதாரமற்ற பழங்கள்தான் சந்தைகளை ஆக்கிரமித்து உள்ளன.
    அழகுக்கு பின்னால் ஆபத்து ஒளிந்திருக்கும் என்பார்கள்.

    இது எதற்கு பொருந்துதோ இல்லையோ, இன்று சந்தைகளில் காணும் பழங்கள் விஷயத்தில் சாலப்பொருந்தும். காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் கடைகளில் பல்வேறு வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கனிகள் உடலுக்கு பலத்தை தருகிறதோ என்னவோ? வாங்குவோரை வேதனைப்படுத்துகிறது என்பது நிஜம்.

    தினம் ஒரு ஆப்பிள் உண்பவரை டாக்டர் அண்டமாட்டார் என்று உரைப்பது உண்டு. இப்படி பழங்களின் மகத்துவத்தை உணர்ந்ததால் மக்கள் தங்கள் அன்றாட உணவில் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    ஆனால் இன்று நாம் வாங்கும் பழங்கள் சுகாதாரமான முறையில் உள்ளதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.



    மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், இனிப்பு கரைசல் மற்றும் நிறமிகள் ஏற்றப்பட்ட தர்ப்பூசணி, கல் வைத்து பழுத்த மாம்பழம் என சுகாதாரமற்ற பழங்கள்தான் சந்தைகளை ஆக்கிரமித்து உள்ளன. வாழைக்காய், பப்பாளி போன்றவற்றையும் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கின்றனர்.

    வாழைத்தார் மீது ஒரு ரசாயனத்தை பீய்ச்சி அடிக்கிறார்கள். மாயாஜாலம் போல அந்த தார் சில மணித்துளிகளில் பழுத்த பழங்களாக ஆகிவிடுகின்றன.

    பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருளில் பாஸ்பரஸ், அசிட்டிலின் போன்ற நச்சுக்கள் அடங்கி உள்ளன. காய்களை பழுக்க வைக்க இவைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், செயற்கை நிறமிகள் மற்றும் மெழுகு அடங்கிய பழங்கள் மனித ஆரோக்கியத்துக்கு எமனாக இருக்கின்றன.

    இத்தகைய கலப்படம் நிறைந்த பழங்களை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன.

    பழத்தின் மேற்பரப்பை பஞ்சினால் தேய்த்து, அதை தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் ஊற வைத்தால், பஞ்சின் நிறம் மாறும். இதைப்போல பழத்தின் ஒரு துண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்தால் நீரின் நிறம் மாறும்.



    இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அந்த பழத்தில் செயற்கை நிறமி இருப்பதை உறுதி செய்யலாம்.

    இதைப்போல ஆப்பிளின் மேற்பரப்பை ஒரு பிளேடு மூலம் தேய்த்தால், அதன் தோலில் மெழுகு இருந்தால் கண்டுபிடிக்கலாம்.

    எனவே சந்தைகள், அங்காடிகளில் பழங்களை வாங்கும் போதும், வாங்கிய பின்னரும் அதில் சற்று கவனம் செலுத்துதல் அவசியம்.

    ஒரே சீரான வடிவம், அளவு மற்றும் வண்ணங்கள் மூலம் கண்ணை பறிக்கும் பழங்கள் பெரும்பாலும் நஞ்சையே உள்ளே வைத்திருக்கும்.

    எனவே அவற்றை விடுத்து உடலுக்கு நன்மை விளைக்கும் பழங்களை புத்தி கூர்மையுடன் வாங்கி பயன்படுத்துவதே நலம்.

    இதைப்போல குறிப்பிட்ட பழங்களை அவற்றின் சீசன் நேரங்களில் மட்டுமே வாங்குவது நலம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    ஏனெனில் சீசன் இல்லாத நேரங்களில் விற்கப்படும் பழங்கள் பெரும்பாலும் கலப்படத்துக்கே வாய்ப்புள்ளவை என அவர்கள் எச்சரிக்கின்றனர். சீசன் தொடங்கும் நேரத்தில்தான் அதிக கலப்படம் கொண்ட பழங்கள் விற்பனைக்கு வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.



    ஒருவேளை இத்தகைய கலப்பட பழங்களை வாங்கியிருந்தால் அவற்றின் மேற்பரப்பில் இருக்கும் வேதிப்பொருள் போன்ற நச்சுக்களை வீட்டிலேயே அகற்றவும் வழி உள்ளது.

    திராட்சையை உப்புநீர் அல்லது வினிகர் கரைசலில் கழுவினால் ரசாயனம் நீங்கி தூய்மையாகி விடும்.

    ஆப்பிளை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் கழுவினால் அதன் வெளிப்புறத்தில் உள்ள மெழுகு கரைந்து போகும்.

    வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை தோல் நீக்கி உண்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

    இப்படி உடல் நலனுக்கு அதிக பயன் தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்தும், அவற்றை நச்சு நீக்கி உண்பது பற்றியும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கையேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த கையேட்டை ஆணையத்தின் இணையதளத்தில் போய் பதிவிறக்கம் செய்து உடல் ஆரோக்கியத்தை பேணலாமே.

    -வினி ஜெசிகா
    Next Story
    ×