search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி பூஜை விதிமுறைகள்
    X

    நவராத்திரி பூஜை விதிமுறைகள்

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் அம்பிகையையும், 2-வது மூன்று நாட்கள் அம்பிகையையும், 3-வது மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம்.
    மூன்று மாபெரும் சக்திகளான அன்னை துர்க்கை, அன்னை லெட்சுமி, அன்னை சரஸ்வதியினை போற்றி 9 நாட்கள் கொண்டாடும் விழா தான் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் மாலை அம்மாவாசையில் ஆரம்பித்து 10-வது நாளான விஜயதசமி வரை இந்த விழா நடைபெறும்.

    முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்க்கை ரூபமாகவும் இரண்டாவது மூன்று நாட்கள் அம்பிகையை லெட்சுமியாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் அம்பிகையை சரஸ்வதியாகவும் வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இக்காலகட்டத்தில் காலை, மாலை இருவேளையும் அம்பிகை வழிபாடு நடைபெறும்.

    கொலு வைக்கும் பழக்கம் உடையவர்கள் ஒற்றை படை கணக்கில் 3,5,7,9 போன்ற எண்களில் படிக்கட்டுகள் அமைத்தும் கலசம் வைத்தும் கொலு பொம்மைகளை வைத்தும் வழிபடுவர். அழகான கோலங்கள், தோரணங்கள், பூ அலங்காரம் இவையால் அம்பிகை இருக்கும் பூஜை அறையினை அவரவர் வசதிக்கேற்ப பக்தியோடு அலங்கரிப்பர்.

    அந்தந்த நாட்களில் வழிபட்டு அம்பிகைக்கு ஏற்ற சகஸ்ர நாமம், அஷ்டோத்திரம், மஹிஷாசுர மார்த்திரி ஸ்லோகம், தேவி பாகவதம் படித்தல் போன்றவற்றினை செய்ய வேண்டும்.

    நவராத்திரி பொழுதில் சிறு குழந்தைகளை அதாவது 2 வயது முதல் 10 வயதுக் குட்பட்ட குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு நலங்கு இட்டு அவர்களுக்கு ஆடை அளித்து, பூ சூட்டி, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, வளையல் மற்றும் இந்த காலத்திற்கேற்றார் போல் கிளிப், பொட்டு, நகபூச்சு அளித்து அவர்களுக்கு பிடித்த இனிப்பு, உணவு கொடுத்து உபசரிப்பர். அக் குழந்தையினை அம்பிகையாக போற்றுவர்.

    ஒரே நாளில் 9 குழந்தைகளுக்கோ அல்லது தன்னால் இயன்ற வகையிலோ எதனையும் செய்யலாம். சிலர் முதல் நாள் ஒரு குழந்தை, இரண்டாம் நாள் இரு குழந்தைகள் என்ற எண்ணிக்கையிலும் செய்வர். இத்துடன் தினம் ஒரு சுமங்கலிக்கும் மேற்கூறிய உபசரிப்பினை செய்வர். இவை அனைத்தும் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப செய்தாலே அம்பிகை மிகுந்த மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வாள்.

    சரி இந்த நவராத்திரிக்கு, இந்த பூஜைக்கு, விரதத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  நவராத்திரி பூஜையினை முனிவர் நாரதர் சொல்லி ஸ்ரீ ராமபிரான் கடை பிடித்து சண்டி ஹோமம் செய்து அம்பிகையின் அருளைப் பெற்று இராவணனை யுத்தத்தில் வென்றதாக சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன.
    துர்க்கா தேவி மஹிசாசுரனுடன் (அரக்கன்) 9 நாட்கள் போரிட்டு வென்று மஹிசாசுரவர்த்தினி என்ற பெயர் பெற்றதாக சாஸ்திர வழிபாடு கூறுகிறது.

    நவராத்திரியான 9 நாளும் அம்பிகையின் சக்தியானது பிரவாகமாய் பரவி இருக்கும். அதனை நம்முள் பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த 9 நாட்கள் பூஜை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் அவரவர் பரம்பரை ஒழுக்கப்படி விரதம் இருப்பவர்களும் உண்டு. எப்பொழுதுமே பூஜைக்கு சில பொதுவான விதி முறைகளும் உண்டு. அவற்றினை அனைவரும் அறிய வேண்டும்.



    * பூஜை செய்பவரும் சரி, மற்றவர்களும் சரி சந்தனம், குங்குமம் இவற்றினை வலது கை மோதிரவிரலால் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும்.

    * வாசனை நிறைந்த மலர்களால் மட்டுமே பூஜிக்க வேண்டும். மலர்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது. மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், சிகப்பு மற்றும் வெள்ளை தாமரை, அரளி, பவளமல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செம்பருத்தி போன்ற மலர்களை மிகவும் சுத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும். பூக்களின் தண்டுப் பகுதி அம்பாள் பக்கத்தில் இருக்க வேண்டும். படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காமல் இருக்க வேண்டும். உதிராமலும் இருக்க வேண்டும்.

    தாழம்பூவினை முட்கள் இல்லாது வெட்டி எடுத்து உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய மலர்களை 1,3,9 என்ற விரிவாக்க முறையில் சமர்பிக்க வேண்டும்.

    அம்பிகை பரத்யட்சமாக இருப்பதனை உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும்.

    * குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறிகூட இருக்கக் கூடாது.

    * நறுமண ஊதுவத்தியினை, தூப சாம்பிராணிகளை பயன்படுத்துங்கள்.

    * ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டைவிரலால் பிடித்து இடமிருந்து வலமாக முழு வட்டமாக மூன்று முறை சுற்ற வேண்டும்.

    * ஆரத்தி காண்பிப்பது நெய்தீபமாக ஏக முகமாகவும், பஞ்ச முகமாகவும் காண்பிக்க வேண்டும். இரண்டு வரிகளாவது அப்போது பாட வேண்டும். அம்பிகை கானப்பிரியை.

    * வீணை போன்று அனைத்து வாத்தியங்களும் அம்பிகைக்கு பிரியம் தான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.

    * அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல் குங்குமம் வைத்து உபசாரம் செய்து வழிபடுங்கள்.

    சித்திரை மாதத்தில் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வருவதுசாரதா நவராத்திரி. அதிக சிறப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே வட இந்தியாவில் தசராவாகவும் தென் இந்தியாவில் நவராத் திரியாகவும் கொண்டாடப்படுகிறது.
    Next Story
    ×