search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண் பக்தர்கள் பொங்கல் வைத்தபோது எடுத்தபடம்.
    X
    கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண் பக்தர்கள் பொங்கல் வைத்தபோது எடுத்தபடம்.

    கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். செவ்வாய்பேட்டையில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருவதால் கம்பம் நடுதல், உருளுதண்டம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனாலும், சில பெண்கள் பிரகாரம் சுற்ற வழியின்றி குறுகிய இடத்திலேயே உருளுதண்டம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பக்தர்கள் எளிதாக கோவிலுக்குள் சென்று உற்சவர் அம்மனை தரிசனம் செய்யும் வகையிலும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது நேற்று முதல் தொடங்கியது. இந்த பொங்கல் வைபவம் இரவிலும் தொடர்ந்தது. விடிய, விடிய கோவிலில் பெண்கள் முதல் நாள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி, பக்தர்கள் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்தபடம்.

    கோவிலில் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாலா முன்னின்று கவனித்தார்.

    ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாகவும் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது.

    செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலிலும் நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சிலர் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராட்சத கிரேன் வண்டிகளில் பக்தர்கள் உடலில் கத்தி, அம்பு போன்றவற்றை அலகாக குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், கடைவீதி சின்ன மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
    Next Story
    ×