வட்டிக்கு வட்டி வசூலிப்பது கைவிடப்படும்: மத்திய அரசின் முடிவுக்கு, ராமதாஸ் வரவேற்பு

ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வருவாய் இழந்துதவிக்கும் கடன்தாரர்களுக்கு இது நிம்மதி அளிக்கும். வரவேற்கத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி கடன்தவணை ஒத்திவைக்கப்பட்ட போதிலும்கூட லட்சக்கணக்கானோர் கடன் தவணையை தவறாமல் செலுத்தி வந்தனர். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததால், அது பெரும் சுமையாக அமைந்துவிடும் என்பதால்தான் அவர்கள் தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் கடன்வாங்கி தவணை செலுத்தினார்கள். அவர்கள் தவணையை செலுத்திவிட்டார்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகை வழங்க மறுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், அது அவர்களின் நேர்மைக்கு வழங்கப்பட்ட தண்டனையாக அமைந்துவிடும்.

எனவே, அவர்கள் தவணைசெலுத்தாமல் இருந்திருந்தால், வட்டிக்கு வட்டியாக அவர்களுக்கு எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமோ, அந்த தொகையை அவர்களுக்கு மானியமாக வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். இதற்கெல்லாம் மேலாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற சிறுகடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com